பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து செல்வதால் தாழ் நில பகுதியை சேர்ந்த மக்களை அவதானத்தோடு இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் எச்.பீ.சி. சுகீஸ்வர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தனகல ஓயா, களனி கங்கை களு கங்கை மற்றும் கின், நில்வளா கங்கை ஆகிய பிரதான கங்கைகளின் நீர்மட்டம் அதிரித்து செல்கின்றது.ஆகவே வெள்ள அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மக்களை அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இதனிடையே, 6 பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்கள் மற்றும் ஆழ்கடல் தொழில்களில் ஈடுபடுபவர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், அந்த பிரதேசங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஏனைய கடற்பரப்புகளில் கடல் அலையானது 2.5 – 3 மீற்றர் வரை உயரலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்பிட்டி, கொழும்பு, காலி முதல் மாத்தறை வரை கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, சீரற்ற காலநிலையின் காரணமாக நாடளாவிய ரீதியில் 12224 குடும்பங்களைச் சேர்ந்த 45239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் பலத்த மழை மற்றும் கடுங்காற்றுடனான வானிலை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதன் காரணமாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
