28.7 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் தடை நீங்கியதா?

மீளாய்வு விசாரணைகளின் முடிவு என்ன?

பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன?

தஞ்சம் கோரப்பட்டோர் எதிர்காலம் பாதிக்கப்படுமா? 

மேலும் பல தகவல்கள்

விசாரணை அறிக்கையிலிருந்து சில பகுதிகள்

கடந்த 21-10-2020 ம் திகதி விடுதலைப்புலிகளின் தடைகளை நீக்கும்படி கோரி பிரிட்டனில் “தடை மீளாய்வு மனு ஆணைக்குழு”  முன்னிலையில்  ஆறுமுகம் என்பவரும் இன்னும் சிலரும் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள்  ‘நாடு கடந்த தமிழீழ அமைப்பினர்’ எனத் தம்மை அழைத்திருந்தனர். 

இவர்கள் கடந்த 2018ம் ஆண்டு டிசெம்பர் மாதம் பிரித்தானிய உள்நாட்டமைச்சரிடம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தடையை நீக்குமாறு விண்ணப்பித்திருந்தனர். இதற்கான பிரதான காரணங்களாக பின்வருவன கூறப்பட்டிருந்தன. 

* அந்த அமைப்பு பயங்கரவாதத்தில் தற்போது ஈடுபடவில்லை.

* இந்த அமைப்பினைத் தொடர்ந்து தடை செய்வது சுதந்திர பேசும் உரிமையைத் தடுப்பதாகவும், நாடுகடந்த தமிழீழ அமைப்பின் கூட்டங்கள் உட்பட “கூட்டம் கூடும் உரிமை”யைத் தடுப்பதாகவும்,

* நாடுகடந்த தமிழீழ அமைப்பினர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை சாதகமாக்க சுதந்திர நாடு ஒன்றை அமைப்பதாக கோருவதாகவும், 

* 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தமது தடைநீக்க விண்ணப்பத்தை உள்நாட்டமைச்சர் நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வெற்றியா, தோல்வியா?

மேற்கூறிய காரணங்களை முன்வைத்து தடையை நீக்கும்படி மீளாய்வு ஆணையகத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். சுருக்கமாக தெரிவிப்பதாயின் உள்நாட்டமைச்சர் விடுதலைப் புலிகளின் தடை நீக்க மனுவை நிராகரித்தமையால், அதற்கான மீளாய்வு மனுவே இதுவாகும். எனவே இப் பிரச்சனையில் வெற்றி அல்லது தோல்வி என்ற நிலை இதுவரை எழவில்லை. பதிலாக மேலும் பல சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதோடு, இவ் விசாரணையில் மேலும் பல தகவல்கள் பிரித்தானிய அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன. அத்துடன் இவ் விசாரணையில் வெளியான தகவல்களின் பிரகாரம் பார்க்கையில் சில நினைவு தின வைபவங்களில் கலந்து கொள்பவர்கள் தொடர்பாக அரசின் கருத்து மேலும் பல சிக்கல்களை பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு ஏற்படுத்தலாம் என்பது வெளிப்பட்டுள்ளது.

சாட்சியங்களின் வகை:

தடை நீக்கம் பற்றிய விசாரணைகள் இரு பகுதிகளாக நடைபெற்றன. அதாவது இதற்கான சாட்சியங்கள் திறந்த சாட்சியங்கள் எனவும், இரகசிய சாட்சியங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டிருந்தன. 

திறந்த சாட்சிங்களில் பல பிரித்தானிய உள்நாட்டு அமைச்சிற்குள் இயங்கும் உளவுத்துறை ஆய்வுகளாகவும்,  இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவராலய அபிப்பிராயங்களாகவும்,  பிரித்தானியாவில் இயங்கும் பொதுநலவாய அமைப்பின் அபிப்பிராயங்களாகவும் வெளியாகின. 

அதேபோலவே உள்நாட்டமைச்சர் வெறுமனே திறந்த சாட்சியங்கள் மட்டுமல்ல, வெளிப்படுத்த முடியாத உளவுத்துறை சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்தே அந்த விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளார். எனவே பிரித்தானிய அரசு விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை எவ் வகையான கண்ணோட்டத்தில் அணுகியுள்ளது? என்பது பற்றிய பல விபரங்களும் இவ் விசாரணைகளில் வெளியாகியது.

விடுதலைப்புலிகள் குறித்த தகவல்கள்:

சுமார் 38 பக்கங்களை உள்ளடக்கிய இவ் விசாரணை அறிக்கையில் விடுதலைப்புலிகள் தொடர்பாக பிரித்தானிய அரசின்  பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை அவதானிக்கும்போது புலம்பெயர் நாடுகளிலும், தாயகத்திலும் இடம்பெறும் நினைவுதின வைபவங்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளைச் சில தனி நபர்களுக்குக் ஆபத்தாக அமையலாம் என்று, குறிப்பாக தஞ்சம் கோரி விண்ணப்பம் கோரியவர்கள் குறித்து நிராகரிக்கும் அபாயம் இருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

முதலில் இவ் விசாரணையின்போது ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரவிலக்கணம் குறித்த சில பகுதிகள் தரப்பட்டன. இவ் விளக்கங்கள் பல அம்சங்களை அதாவது பல செயற்பாடுகளைப் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பயங்கரவாதம் என்பது 

பயமுறுத்தும் செயற்பாடுகள் சில அவ் வரையறைக்குள் கொள்ளப்படுகிறது. அதாவது பயமுறுத்தும் செயற்பாடு ஓர் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்லது சர்வதேச அரச நிறுவனங்களை அல்லது பொது மக்களை அல்லது பொது மக்களில் சில பிரிவினரைப் பயமுறுத்தலைப் பயன்படுத்தி தமது அரசியல், மத, இன அல்லது தத்துவார்த்த கோட்பாடுகளைத் திணிப்பதற்கான முயற்சிகளைக் குறிக்கிறது. 

அத்துடன் இவ்வாறான செயல்கள் என்பது ஓர் தனி மனிதன் மீதான வன்முறையாக, சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதாக அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக அல்லது மனிதரின் சுகாதாரத்திற்கு அல்லது பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பங்கம் விளைவிப்பதாக கருதப்படின் அதுவும் பயங்கரவாதம் என்றே கருதப்படுகிறது.

அமைச்சரின் அதிகாரம்:

எனவே உள்நாட்டமைச்சருக்கு, “பயங்கரவாத அமைப்பு எனக் கருதித் தடை செய்வதற்கு அல்லது இவ்வாறான செயல்கள் ஓர் அமைப்பினால் செயற்படுத்த வாய்ப்பு இல்லை எனக் கருதி அத் தடையை நீக்க” அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அரசாங்கம் தடையை தொடர்ந்து அமுல்படுத்துவதாயின் சில முக்கிய அம்சங்களில் தெளிவான சாட்சியங்களை முன்வைத்தல் அவசியமாகிறது. அதாவது விடுதலைப்புலிகளின் தடையை நீக்க மறுப்பதாயின் அமைச்சர் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், அல்லது அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அல்லது அவ்வாறான செயல்களை ஊக்கப்படுத்தும் செயல்களில் அல்லது உற்சாகப்படுத்தும் செயல்களில் தற்போதும் ஈடுபட்டுள்ளதாகவும் அல்லது வேறு வகைகளில் அவை தொடர்வதாகவும் நிருபித்தல் அவசியமாகும். 

இவ்வாறான அரசின் சாட்சியங்கள் உண்மைகளை உள்ளடக்கியதாகவும், அமைச்சர் நியாயமான விதத்தில் அச் சாட்சியங்களை நம்புவதாகவும் உறுதி செய்தல் வேண்டும். அதேவேளை தடையைத் தொடர்வதா? அல்லது நீக்குவதா? என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அமைச்சருக்கு உண்டு.

இதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அமைச்சர் தமது உளவுப் பிரிவினரின் தகவல்களிலேயே அதிகம் தங்கியுள்ளார். இவ் விசாரணையில் அவ்வாறான உளவுப் பிரிவினரின் தகவல்களில் ஏற்பட்ட மாற்றமே நாடுகடந்த தமிழீழ அமைப்பினருக்கு வாய்ப்பாகிய தருணமாகும். 

சாதகமான உளவுத்தகவல்:

அதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற சாட்சியங்களை உளவுப் பிரிவினர் அமைச்சரின் தீர்மானங்களின்போது  தெரிவித்திருந்தார்கள். அமைச்சர் அச் சாட்சியங்களை முன்வைத்தே தடையை நீக்க முடியாது எனத் தீர்மானித்தார். ஆனால் சில காலத்தின் பின்னர் இலங்கையில் நடைபெற்ற விசாரணைகளில் விடுதலைப்புலிகள் அதில் சம்பந்தப்படவில்லை என்பது தெரியவந்தது. எனவே அமைச்சர் தடையை நீக்க முடியாது என தீர்மானித்த அடிப்படை தவறானது என்பதே ‘நாடு கடந்த தமிழீழ’ பிரிவினரின் வாதமாக அமைந்தது. இவ் விபரங்களை பின்னர் பார்க்கலாம்.

இவ் விசாரணை ஆணைக்குழு சில முக்கியமான அம்சங்களில் தனது தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

–           விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பதை உறுதிப்படுத்துவது.

–           எனவே ஆணைக்குழு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக கூறும்  அதற்கான சரியான சாட்சியங்களை உறுதிப்படுத்தவேண்டியிருந்தது.

–           சாட்சியங்களின் பிரகாரம் பார்க்கையில் விடுதலைப்புலிகளைத் தடை செய்வது இனியும் பொருத்தமில்லை என முடிவு செய்வதாகும்.

மேன்முறையீட்டு ஆணைக்குழு மேலும் சில விபரங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருந்தது.

அதாவது 

–           தடையை நீக்கும்படி விண்ணப்பத்தினை முன்வைத்தவர்கள் விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதைஉறுதிசெய்வது,

–           உள்நாட்டமைச்சர் தடைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு மறுப்புத் தெரிவித்த முடிவுக்கு எதிராக மீளாய்வு மனுத் தொடுக்க முடியுமா? என்பது,

–           தடையை நீக்கும்படி கோருவதற்கான மேன்முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்குவதற்கான தீர்ப்பினை வழங்குவதற்கான ஆதாரங்கள் ஆணைக்குழு முன்னிலையில் உள்ளதா? என்பது போன்றனவாகும். 

ஆணைக்குழு அமைச்சர் விண்ணப்பத்தை நிராகரித்த முடிவு தவறானது எனக் கருதுவார்களாயின் நீதித்துறை மீளாய்விற்கு அனுப்புதல் வேண்டும்.

இங்கு மேற்குறித்த நிலமைகளின் மத்தியில் அரச தரப்பில் தடை தொடரப்பட வேண்டும் என்பதற்கான சாட்சியங்களை நாம் அவதானித்தல் அவசியமானது. ஏனெனில் இச் சாட்சியங்கள் தடை பற்றிய காரணிகளை மட்டுமல்ல, பிரித்தானிய அரசு பயங்கரவாதம் தொடர்பாக கொண்டிருக்கும் கொள்கைகள், விடுதலைப்புலிகள் தொடர்பாக கொண்டிருக்கும் தகவல்கள், எவை எதிர்காலத்தில் பயங்கரவாத செயல்களாக பயன்படுத்தப்படலாம்? என்பனவும் இவ் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.

இது தடை நீக்கம் குறித்தது மாத்திரமல்ல:

பலர் இவ்விசாரணை முடிவுகளை வெறுமனே தடை நீக்கம் என்ற சுருங்கிய செய்திக்குள் கவனத்தைச் சுருக்கி மகிழ்ச்சி அடைவதாக காணப்படுகிறது. ஆனால் நிலமை அவ்வாறில்லை. உதாரணமாக, தமிழ் அரசியல்வாதிகள் பலர் தமது செயற்பாடுகள் சர்வதேச அரசுகளின் கவனங்களைக் குவிப்பதற்காக மேற்கொள்ளப்படுவதாக நியாயம் கற்பிக்கின்றனர். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது பாராளுமன்ற பிரவேசம் என்பது இலங்கை அரசின் முடிவுகளை பாராளுமன்ற கதிரைகள் மூலம் மாற்ற முடியும் என்பதை விட சர்வதேச அரசுகளுக்கு உணர்த்துவதாகவே கூறுகின்றனர்.

ஆனால் இவ் விசாரணைச் சாட்சியங்களை அவதானிக்கும்போது சர்வதேச அரசுகள் வெறுமனே அரசியல் செயற்பாடுகளை மட்டுமல்ல, அரசியல்வாதிகளின் செயற்பாடுகளின் உள்ளடக்கங்களையும் நன்கு தெரிந்தே உள்ளனர் என்பது வெளிப்பட்டுள்ளது. எனவே சர்வதேச அரசுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உணர்த்தியே தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

பிரித்தானிய அரசு விடுதலைப்புலிகள் தொடர்பாக கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் இவ் விசாரணையில் அரச தரப்பு உளவுத்துறை அதிகாரி கடந்த 25-09-2019ம் திகதி தெரிவித்த சாட்சியங்களிலிருந்து அறிய முடிகிறது. 

இவ் அதிகாரி அவ் வேளையில் பிரித்தானிய பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவராகச் செயற்பட்டுள்ளார். இதன் தலைமையகம் பிரித்தானிய உள்நாட்டு அமைச்சில் உள்ளது. 

விடுதலைப்புலிகள் பற்றிய சுருக்கமான விபரம் பின்வருமாறு

–           விடுதலைப்புலிகள் அமைப்பு வே. பிரபாகரன் என்பவரால் 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

–           2009இல் அவர் இறக்கும் வரை அதன் தலைவராக செயற்பட்டார்.

–           அவர்கள் நோக்கம் இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினருக்கென வடக்கு, கிழக்கு பகுதிகளில் தனியான அரசு ஒன்றினை உருவாக்குவதாகும்.

–           அந்த இலக்கை நோக்கிச் செல்வதற்காக பொதுமக்கள், சமூக உட் கட்டுமானங்கள், அரச இலக்குகள் என்பற்றிற்கு எதிராக பாகுபாடற்ற வன்முறையைப் பிரயோகித்தார்.

–           அத்துடன் கடல்கடந்த நாடுகளிலும் அவ்வாறான செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. 

–           இவ் வகை வன்முறைச் செயற்பாடுகள் ஓர் சிவில் யுத்தத்தை உருவாக்க உதவின.

–           இந்த யுத்தத்தில் தரை, வான், கடல் படைகள், தற்கொலைக் குண்டுதாரிகள் போன்றன பயன்படுத்தப்பட்டன.

–           இலங்கை மற்றும் இந்திய முக்கிய அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டனர். 

–           இதில் 1991 இல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, 1993 இல் இலங்கைப் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ என்போர் கொல்லப்பட்டனர்.

–           2009ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தது.

–           இது பாரிய தாக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது.

–           இதனால் இலங்கையில் அவர்களால் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ள முடியவில்லை.

–           அதன் முக்கிய தலைவர்கள் உயிருடன் பிடிபட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.

விடுதலைப்புலிகள் பற்றிய உளவுத்துறையின் கருத்து: 

இந்த விபரங்களைத் தெரிவித்த உளவுத்துறை அதிகாரி விடுதலைப்புலிகள் தற்போதும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கேள்விக்குப் பின்வரும் நியாயங்களை  முன்வைத்தார். 

–           அவர்கள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட சர்வதேச தொடர்புகள் வலைப்பின்னல் இன்னமும் அப்படியே உள்ளது.

–           அவர்கள் இன்னமும் வன்முறையைக் கைவிடவோ அல்லது ஆயுதங்களை ஒப்படைக்கவோ அல்லது தமது அமைப்பைக் கலைத்து விட்டதாகவோ தெரிவிக்கவில்லை.

–           இவ்வாறு தடைப் பட்டியலிலிருந்து விடுதலைப்புலிகளை நீக்கும்படி முன்னர் 3 தடவைகள் விண்ணப்பித்த போதிலும் அவை நிராகரிக்கப்பட்டன. 2014ம் ஆண்டு இறுதியாக தமது விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்தார்கள். 

பிரித்தானிய அரசு விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்தது போலவே மேலும் சில சர்வதேச அமைப்புகளைத் தடை செய்துள்ளது. இவ்வாறான தடைகளைத் தீர்மானிப்பதற்கு சில ஒழுங்கு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களே நாட்டின் பயங்கரவாதத் தடுப்புத் தொடர்பான பிரதான முடிவுகளை மேற்கொள்கின்றன. இவர்களே விடுதலைப்புலிகள் தொடர்பான பல விபரங்களைத் திரட்டி முடிவுகளை மேற்கொள்கின்றனர். இந்த நிறுவனங்கள் தடையை நீக்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது எனக் கருதுமாயின் அமைச்சர் அதற்கு மாறாக முடிவுகளை மேற்கொள்ள முடியாது. 

எனவே இந்த உளவுத்துறை நிறுவனங்கள் இத் தடை நீக்க விண்ணப்பம் தொடர்பாக கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் முக்கியமானவை. ஆணைக்குழுவினர் தடையை நீக்குவது பற்றிய முடிவை மீளாய்வு செய்தற்கு தற்போது அனுமதித்துள்ள போதிலும் பலர் ஆரவாரிப்பது போல முடிவுகள் அமையப்போவதில்லை. ஏனெனில் உளவுத்துறை அறிக்கைகள் அவ்வாறான நம்பிக்கையை இவ் விசாரணையின்போது வெளிப்படுத்தவில்லை.

எனவே உளவுத்துறை நிறுவனங்களின் அறிக்கை பற்றிய விபரங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.   

உளவுத்துறை அறிக்கைகளும் பின்னணியும்

உளவுத்துறையில் இரண்டு பிரதான நிறுவனங்கள் செயற்படுகின்றன. அவை உள்நாட்டு அமைச்சில் செயற்படும் ‘இணைந்த பயங்கரவாத ஆய்வு மையம்’ என்பதும், ‘தடை நீக்கம் செய்வது குறித்த மீளாய்வு குழு’ என்பனவாகும்.

இணைந்த பயங்கரவாத ஆய்வு மையம் சமர்ப்பிக்கும் முடிவகளை அடிப்படையாக வைத்தே தடை நீக்கம் செய்வது குறித்த மீளாய்வு குழு அறிக்கை வழங்கும்.

இணைந்த பயங்கரவாத மைய அறிக்கை

இந்த அமைப்பு சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் செயற்படும் பயங்கரவாத அமைப்புகளின் ஆபத்துகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும். இந்த அமைப்பு மிகவும் தனித்துவமானது. இந்த அமைப்பின் தலைவர் தனது தகவல்களை பிரதான உளவுத்தறை அமைப்பாகிய எம் ஐ 5 என்ற நிறுவன மேலதிகாரிக்கு வழங்குவார். 

இதன் உறுப்பினர்கள் அரசின் பலதரப்பட்ட திணைக்களங்கள், முகவர் அமைப்புகளில் செயற்படுகின்றனர். இதன் பகுதி நேரச் செயற்பாடுகளாக அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பான செயல்கள் அடங்குகின்றன. இவர்களே சம்பந்தப்பட்ட அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடபடுகிறதா? என்பதை உறுதி செய்வார்கள். 

இவ் விண்ணப்பம் தொடர்பாக இணைப்பு மையத்தின் அபிப்பிராயம் என்பது சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாகும். அதாவது தடை செய்வதற்கான காரணமாக பழைய வரலாறுகளை முன்வைக்க முடியாது. 

வழங்கப்படும் சாட்சியங்கள் 12 முதல் 18 மாதங்களுக்குள் நடைபெற்றவையாகவும், அதற்கு முந்திய விபரங்களை வரலாறாகவும் பயன்படுத்தலாம் என்பது நிபந்தனையாகும்.

எனவே விடுதலைப்புலிகள் கடந்த 18 மாதங்களுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை நிருபிப்பது உளவுத்தறையின் கடமையாகிறது.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பாக உளவுத்தறை அளித்த சாட்சியங்கள் முன் பின் முரணாக அமைந்த காரணத்தால் இத் தடை நீக்க விண்ணப்பம் மீளாய்விற்கு அனுமதிக்கப்பட்டது. இவ் விபரங்களைப் பின்னர் பார்க்கலாம். 

இங்கு ‘வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய காரியாலயம்‘ வழங்கிய அறிக்கை மிகவும் பிரதான பங்கை வகிக்கிறது. இந்தக் காரியாலயத்துடன் பிரித்தானியாவில் செயற்படும் பல தமிழ் அமைப்புகள் தொடர்புகளை வைத்திருக்கின்றன. தமிழ் அமைப்புகளில் பல ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் போக்கையும், சில சமயங்களில் தனித்தனியாகச் சென்று தமது தகவல்களைப் பரிமாறி வருகின்றன. இதன் பின்னணியில் ‘பொதுநலவாய காரியாலயம்’ வழங்கிய அறிக்கையின் விபரங்களைப் பார்க்கலாம். 

–           இப் பொதுநலவாய காரியாலயம் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக பல தகவல்களைத் திரட்டுகிறது. அதன் அடிப்படையில் இக் காரியாலயம் தனது அறிக்கையை ‘சர்வதேச உறவுகளில் தனித்துவ அம்சங்கள்’ என்ற தலைப்பில் இரண்டு பிரிவாகத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. 

–           அதில் ஒரு பகுதி ‘தடையை நீக்குவதற்கான காரணங்கள்’ எனவும், அடுத்த பகுதி ‘தடையைத் தொடர்வதற்கான காரணிகள்’ என்ற தலைப்பிலும் சமர்ப்பித்தது. 

–           தடையை நீக்குவதற்கான காரணமாக ஒரே ஒரு அம்சமே குறிப்பிடப்பட்டது. அதில் 2009 இல் போர் முடிவுற்று விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் தோற்கடித்த அமைப்பாக கருதப்பட்டது என மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

–           ஆனால் தடை நீக்கத்திற்கு எதிராக பல அம்சங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் கடந்த கால அரசியல் படுகொலைகள், தற்கொலைக் குண்டுதாரிகள் மூலம் சாமான்ய மக்களைக் கொலை செய்தமை, சிறுவர்களை ஆயுதக் குழுக்களில் இணைத்தமை போன்ற அம்சங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முடிவு பெறவில்ல.

–           சர்வதேச அளவிலான செயற்பாடுகளில் தற்போதும் கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் அதாவது ஜனவரி 2019 இல் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளது. 

–           அத்துடன் விடுதலைப்புலிகளைக் குறிக்கும் அடையாளங்கள் அவர்களின் அங்கத்தவர்களாலும் ஆதரவாளர்களாலும் இலங்கைக்கு வெளியில் இலங்கை அரசிற்கு எதிராக வன்முறையைக் கோரும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. 

–           இவற்றுடன் இணைத்து அவதானிக்கும்போது பிரித்தானியா பல விதங்களில் குறிப்பாக சர்வதேச உறவுகளில் சிக்கலை எதிர்நோக்கலாம். 

–           தடை நீக்கப்படுமானால் இந்திய – இலங்கை உறவுகள் பாதிக்கப்படலாம் எனவும், இலங்கையில் அவை அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும், அடுத்த வருடம் ஜெனீவா மனிதஉரிமை ஆணைக்குழு மாநாட்டில் போர்க்கால சம்பவங்கள் தொடர்பாக இலங்கை ஏற்றுக்கொண்ட நல்லிணக்க முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதில் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும்,

–           பயங்கரவாத தடுப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நட்பு நாடுகளின் செயற்பாடுகளில் இவை தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் தனது தடை நீக்க விண்ணப்பத்தினை நிராகரிப்பதற்காக முடிவுகளை மேற்கொள்கையில் பிரித்தானியாவில் வாழும் சமூகங்களுக்குள் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தடை நீக்கம் செய்யப்பட்டால் பிரித்தானியாவில் வாழும் பலர் அம் முடிவை அதிகளவில் எதிர்ப்பதற்கு வாய்ப்பு உண்டு எனவும், அத்துடன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கும் இரு சமூகங்கள் மத்தியில் அதிக அளவிலான நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களின் தாக்கங்கள் குறித்து தெரிவிக்கையில் சில வேளைகளில் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் தடுக்கப்பட்ட கொடிகளைப் பயன்படுத்துவது, சமூக வலைத் தளங்களில் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் விபரங்கள் வெளியிடுவது போன்றனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரக அறிக்கை

இவ் அறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கை நிலவரம் தொடர்பாக எவ்வாறான செய்திகள் பரிமாறப்படுகின்றன? என்பது குறித்து அறிந்து கொள்ள இது உதவுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழ் அரசியல்வாதிகள் தாம் சர்வதேச அதிகாரிகளுக்கு இலங்கையின் உண்மை நிலவரங்கள் குறித்து தகவல்களைப் பரிமாறுவதாகக் குறிப்பிடும் போதிலும் அந்த நாடுகள் தாமாக சேகரித்த செய்திகள் அரசியல்வாதிகள் குறிப்பிடுவதை விட மிக அதிகளவில் இருப்பதை இவை உணர்த்துகின்றன. அந்த அறிக்கையின் சில பகுதிகள்,,,

–           தமிழ் மிதவாத பாராளுமன்ற அரசியல் தலைவர் மீதான தாக்குதல் ஒன்று இலங்கைப் படைகளால் தடுக்கப்பட்டுள்ளது.

–           2019ம் ஆண்டு நான்கு சந்தேக நபர்கள் பயங்கரவாத குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

–           இவ் விசாரணைகள் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் ஆரம்பித்தன. 

–           2018ம் ஆண்டு யூன் மாதம் கணிசமான ஆயுதங்கள், வெடி மருந்துகள், விடுதலைப்புலிகளைக் குறிப்படும் அடையாளச் சின்னங்கள் இலங்கையின் வடகிழக்கில் கைப்பற்றப்பட்டன.

இச் சந்தர்ப்பத்தில் இவ் வழக்கினைத் தாக்கல் செய்த ‘நாடு கடந்த தமிழீழ அமைப்பினர்‘ குறித்தும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில்

–           தடை நீக்கப்படுமானால் பிரித்தானியாவின் நலன்களுக்குப் பல விதங்களில் பாரிய பாதிப்பு ஏற்படும்.

–           இவ் விண்ணப்பத்தினை முன்வைத்துள்ள அமைப்பினரின் செயல்களை அவதானிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அல்லது நீண்ட கால அமைதியில் சிறிதளவாயினும் விருப்பம் காட்டவில்லை. 

–           வன்முறையைக் கைவிடுவதாக இதுவரை தெரிவிக்கவில்லை. 

–           விடுதலைப்புலிகளும், இந்த அமைப்பினரும் இலங்கையில் பிரிவினை தவிர்ந்த எந்த ஆக்கபூர்வ  கோரிக்கைகளையும் நிராகரிப்பதைத் தவிர வேறு எதையும் முன்வைத்திருப்பதாக காண முடியவில்லை. 

–           இவர்கள் வன்முறையை நிராகரிப்பதாக தெரிவித்த போதிலும், விடுதலைப்புலிகள் அவ்வாறு எதனையும் கூறவில்லை.

–           விண்ணப்பதாரர்கள் விடுதலைப்புலிகளின் துப்பாக்கிகளும், குரலும் இலங்கை அரசினால் மௌனமாக்கப்பட்டிருப்பதாகவே பிரச்சாரம் செய்கின்றனர்.

–           இக் கருத்துகளிற்கும், விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிடுவதாகத் தெரிவிப்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அதனை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை.

பிரித்தானிய தூதரகத்தின் அறிக்கையின் முடிவுரையில் தடை நீக்கப்படுமானால் மிக அதிகளவான பாதிப்பும்,  தாக்கங்களும் தடை நீக்கப்படுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை விட அதிகமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பயங்கரவாத ஆய்வு மையத்தின் அறிக்கையின் சில பகுதிகள்

–           இவை இரகசிய தகவல்கள் என்பதால் மூடிய விதத்தில் விசாரிக்கப்பட்டன.

–           இத் தகவல்களைப் பின்புலமாக வைத்தே உள்நாட்டமைச்சர் தடையை நீக்குவது குறித்து முடிவு செய்வார். 

–           வரலாற்றின் தகவல்களாக, விடுதலைப்புலிகளின் தோற்றம் 1967 எனவும், 200 இற்கு மேற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும்,

–           இவர்களே இடுப்பில் எடுத்துச் செல்லக்கூடிய தற்கொலை வெடி குண்டுகளை முதலில் அறிமுகப்படுத்தினார்கள் எனவும்,

–           குண்டுகள் நிறைத்த வாகனங்கள், வள்ளங்கள், எளிய விமானங்கள் என்பன தாக்குதலின் தந்திர வழிகள் எனவும், 

–           2009ம் ஆண்டு இந்த அமைப்பினர் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலைப் பின்னல்கள் இன்னமும் இறுக்கமாகச் செயற்படுவதாகவும்,

–           2012 முதல் 2017 வரையான காலப்பகுதியில் தனி நபர்கள் அல்லது குழுக்கள் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளும் அளவிற்கு தகுதி பெற்றுள்ளதாகவும், அல்லது குழுக்களாக மீளுயிர்ப்புப் பெற வாய்ப்பு உள்ளதாகவும்,

–           இப் பிரிவினை அமைப்பிற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் காணப்பட்ட சிக்கலான அம்சங்கள்

ஏற்கனவே குறிப்பிட்டது போல உள்நாட்டமைச்சர் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு விடுதலைப்புலிகள் கடந்த  18 மாதங்களுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை உறுதி செய்தல் அவசியம். அவ்வாறில்லை எனில் தேவையற்ற விதத்தில் தடையை நீடிக்க முடியாது. இந் நிலையில் அமைச்சர் கடந்த 18 மாதங்களுக்குள் இடம்பெற்ற பயங்கரவாத செயல் எனக் குறிப்பிடும் சம்பவம் தற்போது சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

2018ம் ஆண்டு யூன், 2018ம் ஆண்டு நவம்பர் சம்பவங்கள்

2018ம் ஆண்டு யூன் மாதம் வாகனங்களைத் தடுத்து பரிசோதனைகளை மேற்கொள்ளும் வழமையான சோதனைகளின்போது முச் சக்கர வண்டி ஒன்று தடுக்கப்பட்ட போது பயணம் செய்த இருவர், அதற்குள் கிளேமோ கண்ணி வெடி, இரு கைக்குண்டுகள், 98 சுற்றுத் தோட்டாக்கள் மற்றும் சில ஆயுதங்கள் பிடிபட்டன. அத்துடன் விடுதலைப்புலிகளின் சீருடைகள், சில ரி சேட்டுகள் என்பனவும் பிடிபட்டன. 

இவர்கள் இருவரும் 2009ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாகவும், அதில் பிடிபட்ட இருவரில் ஒருவரின் சகோதரி தனது சகோதரர் விடுதலைப்புலிகளுக்காக குண்டு தயாரித்த வேளையில் ஒரு கையை இழந்தார் எனவும், தனது குடும்பத்தில் இரு சகோதர்களும், ஒரு சகோதரியும் ராணுவத்துடனான போரில் மடிந்தார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

அடுத்த சம்பவம் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பில் இரு பொலீஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவமாகும். இச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும், அதில் ஒருவர் விடுதலைப்புலிகளின் பயிற்சியாளர் எனவும், நினைவு தினங்களை ஒழுங்கு செய்வதில் முன்னணி வகிப்பவர் எனவும், இலங்கைப் பொலீசாரின் விசாரணைகளில் இத் தாக்குதலுக்கு உத்தரவிட்டவர் ‘கருணா அம்மான்’ எனவும் தெரிவித்தனர்.

இவ் இரண்டு சம்பவங்களை ஆதாரமாக வைத்தே விடுதலைப்புலிகள் தற்போதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பிரித்தானிய உளவுத்துறை தனது உள்நாட்டமைச்சருக்குத் தெரிவித்திருந்தது. இத் தகவல்கள் பல பத்திரிகைகள் மற்றும் பகிரங்கமாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையிலானது ஆகும். 

அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ‘கரும்புலிகள் தினம்’ , ‘மாலதி தினம்’ போன்றவற்றை ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான ஆயுதங்களுடனான கைதுகளும், விடுதலைப்புலிகளின் அடையாளங்களை ஏந்திச் செல்வதும், அவர்களின் கோட்பாடுகளையும், அடையாளங்களையும் நினைவுபடுத்தி தனி நபர்களை உற்சாகப்படுத்துவதாக உள்ளது. 

கடந்த 2018ம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்ற  உறுப்பினர் ஒருவர் புலிகளின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவ்வுரையின்போது, வட பகுதியில் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதாகவும்,  விடுதலைப்புலிகள் நிர்வகித்த வேளையில் இதைவிட சிறந்த பாதுகாப்பு இருந்ததாகவும் கூறியிருந்தார். 

இவ் விவாதங்களின் பிரகாரம் அவதானிக்கையில் விடுதலைப்புலிகளின் கோட்பாடுகள் இன்னமும் தனி மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இவ்வாறான நினைவு தினங்கள் பயங்கரவாதத்திற்கான தயாரிப்புகளாகவே உள்ளதாகவும் உளவுப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவிலான செயற்பாடுகள் குறித்து தெரிவிக்கையில் நினைவு தினங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதும், அதில் முன்னர் விடுதலைப்புலிகளில் இருந்தவர்கள் கலந்து கொள்வதும் பிரச்சனைக்குரியதாகவே விபரிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் சுமார் 2லட்சம்- 3 லட்சம் தமிழர்கள் வாழ்வதாகவும், அதில் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும் அடங்குவர் எனத் தெரிவித்துள்ள அந்த அறிக்கை, பல புலம்பெயர் அமைப்புகள் இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த அமைப்புகள் உள்ளதாகவும், அவ்வாறான அமைப்புகளில் ‘பிரித்தானிய தமிழர் ஒன்றியம்’ என்ற அமைப்பு 2006ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சாராம்சம்:

விடுதலைப்புலிகளின் ஆதரவிற்காக நடத்தப்படும் நினைவு தினங்கள் மற்றும் அந்த நினைவுகள் நடத்தப்படும் அளவுகளும், முறைகளும் குறிப்பாக பிரித்தானியாவில் இடம்பெறும் நினைவு தினங்களில் முன்னாள் புலிகள் ஆதரவாளர்கள் கலந்து கொள்வதும் பயங்கரவாத்தைத் தொடர்ந்தும் உற்சாகப்படுத்தும் செயலாகவே கருதுகிறது.

விசாரணை மீளாய்விற்கான தீர்ப்பின் பிரதான காரணி:

இவ் விசாரணையில் தடையை நீக்கும்படி விண்ணப்பித்தவர்கள் மூன்று பிரதான காரணங்களை முன்வைத்தனர்.

1.        அமைச்சரால் திறந்த ஆவணங்கள் என முன்வைக்கப்பட்டவைகள் விடுதலைப்புலிகள் இன்னமும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பதை நிருபிக்கவில்லை.

2.        திறந்த ஆவணங்கள் எவையும் அமைச்சர் தனது விசேட அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கானதாக இருக்கவில்லை. 

3.        விடுதலைப்புலிகள் மீதான தொடர்ச்சியான தடை இலங்கைத் தமிழருக்கான சுதந்திர தீர்வை அடைவற்கான விண்ணப்பதாரிகளின் முயற்சிகளை தேவையற்ற விதத்தில் தடுக்கிறது.  

உள்நாட்டமைச்சரின் தவறான முடிவுகள்

இவ் விசாரணையில் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நிருபிக்க முன்வைக்கப்பட் இரு சம்பவங்கள் அதில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் தவறான தகவல் மீது முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு பொலீசார் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கான வலிமையான சாட்சியம் இல்லை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2018ம் ஆண்டு யூன் மாதம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டார்கள் என்பதற்கான தகுந்த சாட்சிங்கள் இல்லை என்பதும், அம் முடிவுகள் வெறுமனே பத்திரிகை செய்திகளே ஆதாரமாக முன்வைக்கப்பட்டிருந்தன. 

மீளாய்விற்கு அனுமதிக்கப்பட்டதற்கான காரணங்கள்:

பகிரங்க விசாரணையின்போது பொதுச் சட்டத்தின் பிரகாரம் பார்க்கையில் 2018ம் ஆண்டு யூன் மாதம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் நியாயமானதாக காணப்படவில்லை. 

அமைச்சர் தமது விசேட அதிகாரங்களைக் கவனத்தில் எடுத்து முடிவுகளை மேற்கொண்டார் என்பது குறைபாடானது. 

முடிவுரை:

இவ் விசாரணை பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான முயற்சி எனக் கருதினாலும், இவ் விசாரணையின் பெறுபேறுகள் மேலும் பல செய்திகளை எமக்கு உணர்த்துவதாக உள்ளன. 

உளவுப் பிரிவின் தகவல்கள் வெளியிடப்படும் தருணங்களில் காணப்படும் நிலமைகளைக் கருத்தில் கொள்வதால் அத் தகவல்கள் காலப்போக்கில் மாறும்போது அதன் முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்பு எனத் தரப்பட்ட தகவல் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். 

அடுத்ததாக, அமைச்சரின் கவனத்திற்கு தனிப்பட்ட விதத்தில் தரப்பட்ட தகவல்கள் உண்மைகளின் அடிப்படையிலானதா? என்பதை அவரே ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும் என்ற கடப்பாடு இல்லை எனக் கூறப்பட்டதை அவதானிக்கும் போது உளவுப் பிரிவின் தகவல்களே அவரது முடிவுக்கு ஆதாரம் என்பது வெளிப்படுகிறது.

2018ம் ஆண்டு யூன் மாத சம்பவ தகவல்கள் தவறானவை என்பதால் அமைச்சர் தமக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்பதை ஆணைக்குழு ஏற்கவில்லை.

நினைவு தின வைபவங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்கள் என்பது எவ்வளவு தூரம் இணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன? என்பதும் இவை விடுதலைப்புலிகளின் செயற்பாட்டிற்கு உதவும் என்பதை உணர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது தமது சட்டப்படியான செயல்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்த வாதத்தை நிராகரித்ததோடு, அமைதியான செயற்பாடுகளுக்கு இத் தடை இடையூறாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது. 

இவ் விசாரணை அறிக்கையை மிகவும் சுருங்கிய விதத்தில் வியாக்கியானம் செய்வது சில தேவைகளை நிறைவேற்ற உதவலாம். ஆனால் நீண்ட காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அரசியல் தஞ்சம் கோருவோர் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதும், பொதுநலவாய நாடுகளின் சந்தைகளை நோக்கிச் செல்லும்போது அதன் உறவு அந்தந்த நாடுகளின் அரசுகளுடன் எவ்வாறு எதிர்காலத்தில் அமையும்? என்பதைக் கவனத்தில் கொண்டு “இத் தடை விவகாரம் மகிழ்ச்சி தரும் விடயமா? அல்லது மேலும் பல தொல்லைகளுக்கான ஆரம்பமா?“ என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles