புத்தளம் , கற்பிட்டி – வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெப் வண்டி, லொறி என்பனவற்றுடன் டிங்கி இயந்திர படகு மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24, 25 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கற்பிட்டி, இலந்தடிய கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான தம்பபண்ணி கடற்படையினர் கடந்த வாரம் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 2223 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பீடி இலைகள் 70 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், இதற்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கற்பிட்டி வன்னிமுந்தல் கடற் பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, 19 உரைப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 639 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி இயந்திர படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பெயரில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் புத்தளம் – தளுவ கடற்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (26) இரவு சந்தேகத்திற்குரிய முறையில் நிறுத்தி வைக்கப்ப லொறியொன்றை பரிசோதனை செய்த கடற்படையினர் அந்த லொறியில் இருந்து 1236 கிலோ 500 கிராம் பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் , லொறி, கெப் வண்டி மற்றும் டிங்கி இயந்திர படகு என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடமும், மதுரங்குளி பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.