தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது போலிச் செய்திகளைப் பரப்பினால் ஐந்து வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல், நடவடிக்கைகளின் போது எவரேனும் ஒருவர் அவருடைய பெயர் அல்லது முகவரி தொடர்பில் தவறான விவரங்களை வழங்கினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.
இதேவேளை, தன்னைப் பிறிதொரு நபரைப் போன்று அடையாளப்படுத்தினாலும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். இது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய குற்றச்செயலாகும். பிறிதொரு நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது அங்கே மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்ற முடிவுக்கு வரமுடியும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சந்தேக நபர்களால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படுவதால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை நிரூபிக்கவும் உரிய ஆதாரங்கள் எம்மிடம் இருக்கும். அதற்கமைய மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரை ஐந்து வருடங்கள் வரை சிறைவைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.