29 C
Colombo
Friday, July 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மஞ்சள் ஆபத்தும் மஞ்சள் விலை கூடிய ஒரு குட்டித் தீவும்

யார் இந்து சமுத்திரத்தில் கடல்சார் மேலாண்மையை அடைகிறாரோ அவரே அனைத்துலக அரங்கில் முதன்மையான பாத்திரத்தை வகிப்பார்.யார் இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துகிறாரோ அவர் ஆசியாவின் மீது ஆதிக்கத்தைக் கொண்டிருப்பார். இருபத்தியோராம் நூற்றாண்டில் எழு கடல்களுக்குமான திறப்பு இந்து சமுத்திரமே. இந்த எழு கடல்களுமே உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.

அட்மிரல் அல்பிரட் தயர் மகான்- Admiral Alfred Thayer Mahan

“சுதத்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்காக நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம்.” ஜனாதிபதியின் அலுவவலகத்தில் உள்ள விருந்தினர் பதிவேட்டில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் பொம்பியோ எழுதிய வசனங்களில் ஒரு பகுதி இது. அதாவது சீனாவுக்கு எதிரான இந்தோ பசுபிக் வியூகத்தில் இலங்கையை இணையுமாறு கேட்கிறார்.

கடந்த புதன்கிழமை கொழும்புக்கு வந்த  பொம்பியோ ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வருமாறு கூறினார்…..“ நாங்கள் நண்பர்களாக வருகின்றோம், சகாக்களாக வருகின்றோம். ஆனால் சீனாவோ, இலங்கையின் இறையாண்மையை மோசமாக மீறும் வகையில் மோசமான உடன்படிக்கைகளையும் சட்ட மீறல்களையும் கொண்டு வந்திருக்கின்றது. இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி பிறரைச் சூறையாடும் தன்மை கொண்டது ”

அதாவது சீனா இலங்கைத்தீவின் இறையாண்மையை  மீறுகின்றது என்று அமெரிக்கா கூறுகிறது.  இக்கூற்றில்  உட்பொதிந்திருக்கும் அர்த்தம் என்ன? சீன விரிவாக்கத்தால் அல்லது சீன மயப்பட்டதால் இலங்கையின் இறையாண்மை பலவீனமடைகிறது என்று அமெரிக்கா கூறுகிறது.

ஆனால் சிறிய இலங்கை தீவு சீனாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் இருந்து அவ்வளவு சுலபமாக வெளி வர முடியுமா? அல்லது இக்கேள்வியை மாற்றிப் பிடிக்கலாம். இலங்கைத் தீவு சீனாவின் செல்வாக்கு மண்டலத்திலிருந்து வெளிவருவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஜனாதிபதி கூறுவது போல அணிசேரா வெளியுறவுக் கொள்கை ஒன்றை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால்  இலங்கைத்தீவின் அமைவிடத்தை கருதிக் கூறின் இச்சிறிய தீவு அணிசேராமல் தனித்துவமாக நிற்க முடியுமா?

முடியாது என்பதே குரூரமான யதார்த்தமாகும். ஏனெனில்  இலங்கைத் தீவின்  அமைவிடம்தான் அதற்குக் காரணம். இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க கடற் பாதையில் இலங்கை அமைந்திருகிறது. அதோடு  தென்னிந்தியாவுக்கு கீழே ஒரு கண்ணீர் துளி போல காணப்படுகிறது. இச்சிறிய  தீவில் தமது ஆதிக்கத்தை பலப்படுத்தும் சக்திகள் தென்னிந்தியாவை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வரலாம். எனவே தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு  உருவாக்கப்படும் எந்த ஒரு   வியூகத்திற்குள்ளும் இலங்கைத் தீவு சிக்காமல் தப்ப முடியாது.

இதில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் ஒரே விதமாக விதிதான் உண்டு.  ஒரு அரசற்ற தரப்பு என்ற காரணத்தால் தமிழ் மக்களை எல்லா வல்லரசுகளும் சேர்ந்து இலகுவாகப் பந்தாட முடிந்தது . அந்த யுத்த வெற்றியை ராஜபக்சக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதி மயங்குகிறார்கள். ஆனால் அது ஒரு பிராந்திய வெற்றியும்  பூகோள வெற்றியும் ஆகும். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய மற்றும் பூகோள நோக்கு நிலைகளில் இருந்தே நசுக்கப்பட்டது. அதில் ராஜபக்சக்கள் கருவிகளே. இப்பொழுது தமிழ் எதிர்ப்பு இல்லை. ஆனால் இச்சிறிய தீவை தமது செல்வாக்கை வளையத்துக்குள் கொண்டுவர எத்தனிக்கும் எல்லா பேரரசுகளும் கொழும்பை நோக்கி மொய்கின்றன.

அமெரிக்க ராஜாங்க அமைச்சர் பொம்பியோவின் வருகைக்கு முன்னரே கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரகமும் சீனத் தூதரகமும் ஒன்றுக்கு எதிராக மற்றது அறிக்கை விடும் நிலைமை தோன்றி விட்டது. ஒரு சிறிய தீவை முன்வைத்து இரண்டு பேரரசுகள் இவ்வாறு மோதிக் கொள்வது என்பது வழமைக்கு மாறானது.  அதேசமயம் இவ்வாறு இரண்டு பேரரசுகளும் மோதிக் கொள்வது ஒரு விடயத்தை தெளிவாகக் காட்டுகிறது. என்னவெனில் இலங்கைத்தீவின் கவர்ச்சி அதிகரித்திருக்கிறது என்று பொருள். ஆனால் அது நேர்மறைக் கவர்ச்சியல்ல.அது ஓர் எதிர்மறை கவர்ச்சி.  இலங்கை தீவு சீன மயப்பட்டதன் விளைவாகவே அந்த கவர்ச்சி ஏற்பட்டது. சீனாவின் செல்வாக்கு வளையத்துக்குள் இருந்து இலங்கை தீவை எப்படிக் கழட்டி எடுக்கலாம் என்று அமெரிக்கா முயற்சிக்கின்றது.

கோவிட்-19 சூழலுக்குள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போட்டி அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வந்துவிட்டது. ஏறக்குறைய ஒரு பனிப் போர் சூழல் மேலெழுகிறது. பொம்பியோவின் வருகைக்கு முன்னர் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு “ (இலங்கை தொடர்பான அமெரிக்க உயரதிகாரியின் கருத்து) அவர்களின் ‘பனிப்போருக்கான’ மனோ நிலையையும்  பிற நாடுகளின்  விவகாரங்களில் தன்னிச்சையாகத் தலையீடு செய்யும் அதன் போக்கையும் சிறிய நாடுகள் எந்த பக்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறும் தன்மையையும்  வெளிப்படுத்துகின்றது”

இவ்வாறு இரண்டு பேரரசுகளும் ஒரு   பனிப்போரை நோக்கி நகரும் உலகச் சூழலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்தார்.இதை ட்ரம்பின் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கலாம். பொம்பியோ இங்கு வர முன்பு இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அவரோடு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலரும் சேர்ந்து சென்றார். அமெரிக்காவின் இரண்டு பிரதான செயலர்கள் ஒரேயடியாக இந்தியாவுக்கு வந்தமை என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவில் இருவரும் ஐந்து  உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர்.அதில் முக்கியமானது அடிப்படைப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்குமான உடன்படிக்கை (BECA)ஆகும். இந்த உடன்படிக்கை சீனாவிடம் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கிலானது.இந்த உடன்படிக்கையின் கீழ் இந்தியாவும் அமெரிக்காவும்  வரைபடங்கள் ; கடல் சார் வான் சார் வழி வரைபடங்கள்; செய்மதித் தகவல்கள் உள்ளிட்ட படைத்துறை தகவல்களை தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளும். இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின் பேசிய பொம்பியோ சீன கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசினார். ஆனால் இது தொடர்பில் இந்தியா வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கை எதிலும் அவ்வாறு சீனாவை பெயர் குறிப்பிடவில்லை. அதுமட்டுமல்ல இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பொழுது இரண்டு விடயங்களை தெளிவாக முன்வைப்பது தெரிகிறது.

முதலாவது அவர்கள் சீனாவை செங்குத்தாகப்  பகை நிலைக்குத் தள்ளுவதைத் தவிர்கிறார்கள். இரண்டாவது இப்போது உருவாகி வருவது  இரு துருவ உலக ஒழுங்கு என்பதனை அவர்கள் வெளிப்படையாகக் கூறத் தயாரில்லை. மாறாக பல்துருவ உலக ஒழுங்கு என்றே இப்பொழுதும் குறிப்பிடுகிறார்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் “தேசிய பாதுகாப்பை நோக்கிய எமது செயற்பாடுகள் பல துருவ  உலகில் அதிகமாக வளர்ந்திருப்பது வெளிப்படையானது……பல துருவ உலகம் எனப்படுவது பல துருவ ஆசியா என்பதை அதன் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதாவது அமெரிக்க-சீன பனிப்போரை தனது பிராந்தியத்தில் அப்படியே பிரதிபலிப்பதற்கு  இந்தியா தயாரில்லையா ?ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்பு முதலாளித்துவத்துக்கும் கொம்யூனிசத்திற்கு இடையிலான பனிப் போரை இந்தியா தனது பிராந்தியத்திலும் பிரதிபலித்தது.அதனாலேயே அமெரிக்க சார்பு ஜெயவர்த்தனவை தனது வழிக்குக் கொண்டு வருவதற்காக சோவியத் சார்பு இந்தியா தமிழ் இயக்கங்களுக்குத் தன்னைப் பின் தளமாக திறந்து விட்டது. பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது.உலகளாவிய பனிப்போரின் கருவிகளாக மாறி சிங்களவர்களும் தமிழர்களும் மோதிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் இந்தியா நேரடியாகத் தலையிட்டது. பின்னர் இந்தியாவும் ரத்தம் சிந்த வேண்டி வந்தது. அதன் விளைவாக ஈழப் போராட்டத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே நிரந்தரமான சட்டப் பூட்டு விழுந்தது. இது பழைய பனிப்போர்க் கதை. இப்போது இன்னமும் முழு வடிவம் பெறாத ஒரு புதிய பனிப்போர்.

பழைய பனிப்போர் காலத்தில் அமெரிக்க ஆய்வாளர்கள் வருங்கால உலகப் போக்கை குறித்து  எதிர்வு  கூறியபடியே கடந்த சுமார் நான்கு தசாப்த கால உலகின் போக்கு அமைந்து விட்டது. கம்யூனிசத்துக்கு எதிரான போரை அதாவது பழைய பனிப்போரை அவர்கள் “சிவப்பு ஆபத்துக்கு” எதிரான யுத்தம் என்று வர்ணித்தார்கள். அதன் பின்னர் “பச்சை ஆபத்துக்கு” எதிரான யுத்தம் என்று எதிர்வு கூறினார்கள். பச்சை ஆபத்து எனப்படுவது இஸ்லாமிய தீவிரவாதம்.   அந்த யுத்தம் முடிவுக்கு வரும் பொழுது “மஞ்சள் ஆபத்துக்கு” எதிரான யுத்தம் வரும் என்று கூறப்பட்டது. மஞ்சள் எனப்படுவது மங்கோலிய இனமான சீனர்களைக் குறிக்கும். பச்சை ஆபத்துக்கு எதிரான யுத்தம் பெருமளவுக்கு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்றால் இப்பொழுது மஞ்சள் ஆபத்துக்கு எதிரான பனிப் போர் தொடங்கி விட்டதா?

இதில் சிவப்பு  ஆபத்துக்கு எதிரான பனிப்போரின் குழந்தையே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டமாகும்.அந்தப் பனிப் போருக்குப் பின் வந்த பச்சை ஆபத்துக்கு எதிரான போரின் போது தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம்  முதலில் எழுச்சி அடைந்தது முடிவில் வீழ்ச்சியடைந்தது. இப்பொழுது  ஒரு வைரஸின் பின்னணியில் மஞ்சள் ஆபத்துக்கு எதிரான பனிப்போர் உருக்கொள்ளும் உலகச் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை.

ஐநாவின் 31/1  தீர்மானம்; சவேந்திர சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் பயணத் தடை போன்றவை இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் நோக்கிலானவை. பொம்பியோ “நல்லிணக்கம் பொறுப்புக் கூறல்” போன்ற நிலை மாறு கால நீதியின் வார்த்தைகளைப் பயன்படுதியிருக்கிறார்.அதாவது கொழும்பிலிருக்கும் அரசாங்கத்தை  வழிக்குக் கொண்டு வருவதற்கு திரும்பவும் திரும்பவும் தமிழ் மக்களின் விவகாரமே ஒரு கருவியாக கையாளப்படுகிறது. அப்படி என்றால் புதிய பனிப்போர் சூழலிற்குள்ளும் அதுதான் நடக்கப் போகிறதா? “ பூமியிலே சூரியனுக்குக் கீழே நூதனமானது எதுவுமில்லையா?”

பழைய பனிப்போர் சூழலுக்குள் தமிழ் மக்களிடம் ஆயுத சக்தி இருந்தது.  பேர பலம் இருந்தது. ஆனால் இப்பொழுது தமிழ் மக்களிடம் வாய் மட்டும் தான் இருக்கிறது. பலமான புலம் பெயர்ந்த சமூகம் தன்னால் இயன்றதைச் செய்கிறது. தமிழகம் அவ்வப்போது கொதித்தெழும். ஆனால் நாட்டில் தமிழ்த் தரப்பு சிதறிக் கிடக்கிறது. பொம்பியோ கொழும்பிலிருந்து  புறப்பட்ட அதே நாளில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் சம்பந்தரை சந்தித்திருக்கிறார். இது எதைக் காட்டுகிறது?

புதிய பனிப்போர் சூழல் தீவிரமானால்  அது தமிழ் மக்களுக்கு புதிய சாத்திய வெளிகளைத் திறக்கக்கூடும். ஆனால் அதைக் கையாள்வதற்கு தமிழ்மக்கள் ஒன்றிணைந்த தரப்பாக இல்லை. தமிழ் மக்களிடம் பொருத்தமான வெளியுறவுத் தரிசனமோ பொருத்தமான வெளியுறவு கொள்கையோ பலமான ஒரு  வெளிவிவகாரக் கட்டமைப்போ இல்லை. பழைய பனிப் போரிலிருந்து கற்றுக் கொண்டு புதிய பனிப் போரை எதிர் கொள்ள தமிழர்கள் இன்னமும் தயாராகவில்லை.

நிலாந்தன்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles