கொழும்பு பத்தரமுல்ல மகாவலி அபிவிருத்தி அமைச்சில் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மகாவலி காணி தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது. இதில் மயிலத்தணமடு, மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடபட்டது.
இந்த கூட்டத்திற்கு மட்டக்களப்பை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பா.உறுப்பினர்களான கருணாகரன், சாணக்கியன், சார்ல்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோரும் மகாவலி, நீர்ப்பாசன, விவசாய திணைக்கள அதிகாரிகளும் உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பாக மங்களேஸ்வரி சங்கர், கட்சியின் பொதுச்செயலாலர் பிரசாந்தன் அவர்களும் பங்கேற்றிருந்தனர்.
முதல் கட்டமாக உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை சோளம் பயிர் செய்கைக்கு வழங்குவதை தடுத்து நிறுத்தி குறித்த விடயம் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சனைகளை ஆராய்வதற்கான குழுவில் பாராளூமன்ற உறுப்பினர்களான கருணாகரன் மற்றும் சாணக்கியன் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாலர் பிரசாந்தன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர் அடங்கலாக அதிகாரிகள், பண்ணையார்கள், சிவில் சமூக பிரதிநிதி என பலரையும் உள்ளீர்த்து அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் நவம்பர் 2 ஆம் திகதி குறித்த பிரதேசத்திற்கு களவிஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.