2025 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதியில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யக்கூடாது என்று மின்சார சபை முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் பொது ஆலோசனைகளை கேட்டல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெறும்.
பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு மின்கட்டணம் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்கட்டண திருத்தம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொது ஆலோசனை கேட்டல் நிகழ்வில் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும், இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட மின் கட்டண திருத்த முன்மொழிவு மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஸ்தீர ஊழியர்களின் பரிசீலனைக்குப் பின் தயாரிக்கப்பட்ட வரைவு எதிர் முன்மொழிவு குறித்து எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 17(பி) , 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 மற்றும் மின்சார கட்டண முறைமை ( விலைச் சூத்திரம்) ஆகியவற்றின் படி இந்த பொது ஆலோசனை கேட்டல் நடாத்தப்படுகிறது.
இலங்கை மின்சார சபை 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதிக்கு தற்போது அமுலில் உள்ள மின்கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து அமுல்படுத்துவதற்கு முன்மொழிந்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்மொழிவு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஸ்திர ஊழியர்களின் பரிந்துரைகள் ( எதிர் முன்மொழிவு) தொடர்பாக பொதுமக்கள் தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க முடியும்.
பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் யோசனைகள் ஆகியவற்றை ஆராய்ந்து மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்வு 2025 ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும்.