தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இப்போதும் சம்பந்தன்தான் என்று தமிழரசு கட்சியைச் சேர்ந்த சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறில்லை சம்பந்தன் தொடர்பில் தாம் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கூறுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிதாக இணைந்து கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர் சம்பந்தனை தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூறியிருக்கின்றனர்.
சம்பந்தன் ஒரு மூத்த அரசியல்வாதி.
ஆனால், அவரின் கடைசிக் காலம் இந்தளவு பரிகசிப்புக்குரிய ஒன்றாக மாறியிருக்கின்றது.
இது வெறுமனே சம்பந்தன் தொடர்பானது மட்டுமல்ல – மாறாக, தமிழ்த் தேசிய கட்சி அரசியல் எந்தளவுதூரம் பரிகசிப்புக்குரியதாக மாறியிருக்கின்றது என்பதற்கும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
இதற்கு முதல் காரணம் சம்பந்தனின் தலைமைத்துவம் என்றால், அடுத்தது, தமிழரசு கட்சியின் அண்மைய முடிவாகும்.
சம்பந்தன் ஆரோக்கியமாக இருக்கின்றபோதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்து – அதற்கொரு கட்சி வடிவத்தை வழங்கியிருந்தால் இவ்வாறானதொரு பரிகாசமான நிலைமை ஏற்பட்டிருக்காது.
இது தொடர்பில் அந்தக் காலத்தில் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.
சுமந்திரன் பேச்சாளராக நியமிக்கப்பட்ட பின்னர் பங்காளிக் கட்சிகளுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் தொடர்ந்தும் இழுபறிகள் இருந்துகொண்டேயிருந்தன.
இதன்போது, சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராகக் காத்திரமானதொரு நடவடிக்கையை எடுத்திருக்கவேண்டும். நிலைமைகளை சீர் செய்திருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு எதுவும் நிகழவில்லை.
இதனையும் பலரும் சம்பந்தனுக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஆனால், எவரையும் சம்பந்தன் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் இன்று சம்பந்தன் எவராலும் கண்டுகொள்ளப்படாத ஒருவராகியிருக்கின்றார்.
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளார்கள் விடயத்தில்கூட சம்பந்தனின் அறிவுரைகள் திருகோணமலையில் கண்டுகொள்ளப்படவில்லை.
தமிழரசு கட்சியினர் கூட சம்பந்தனை தேவையற்ற ஒருவராகக் காணும் போக்கு ஏற்பட்டிருக்கின்றது.
விமர்சனங்களுக்கு அப்பால், தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தங்களின் தலைமையாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.
இந்த அடிப்படையில்தான், தமிழ் மக்களின் தலைமையாக கூட்டமைப்பு மட்டுமே நோக்கப்பட்டது.
ஆனால், அந்தப்போக்கில் தற்போது ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.
ஒருவேளை தேர்தல் முறைமையிலுள்ள சிக்கல்களை கருத்தில்கொண்டு தனியாகத் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்திருந்தால், அதனை அனைவரின் சம்மதத்துடனும் மேற்கொண்டிருக்க வேண்டும்.
தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் தீர்மானித்து – ஊடகங்களுக்கு அறிவித்திருக்கக்கூடாது.
இதன் மூலம் கூட்டமைப்பை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து தமிழரசுக் கட்சியே தன்னிச்சையாக வெளியேறியிருக்கின்றது.
இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை சம்பந்தன் கோருவதே தவறானது.
ஒருவேளை தமிழரசு கட்சி இவ்வாறானதொரு முடிவை அறிவித்தபோது, சம்பந்தன் அதனை நிராகரித்து பங்காளிக் கட்சிகளுடன் கைகோர்த்திருக்கவேண்டும்.
ஆனால், அவரோ தனியாகச் செல்லும் தமிழரசு கட்சியின் முடிவுக்கு பின்னாலேயே மறைந்துகொண்டார்.
எனவே, கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பைக் கோரும் தகுதியை சம்பந்தன் இழந்துவிட்டார்.
ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் சம்பந்தன் தொடர்ந்தும் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கமுடியும்.