26 C
Colombo
Tuesday, November 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளன- அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு அரசு விதித்த தடை நீட்டிப்பு, சரியான காரணங்களை கவனத்தில் கொண்டு வழங்கப்படவில்லை என்று லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும், இந்த தீர்ப்பு அடிப்படையில் பிரிட்டன் அரசும் மனுதாரரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பின் பிரதிநிதிகள், சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வ மனுக்கள் 28 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளிக்கும்.

இந்த விவகாரத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், எல்டிடிஈயை வீழ்த்தி அதன் கொடூரமான தீவிரவாத செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை. ஆனால், எல்டிடிஈ பயங்கரவாதத்தின் மிச்சங்கள் உலகம் முழுவதும் விழிப்புடன் இருப்பது எந்தவொரு நாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. எனவே எல்டிடி மீதான தடையை பிரிட்டன் அரசு அப்படியே வைத்திரு்ககும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை வெளி விவகார அமைச்சம், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறைகளை தூண்டவும், நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு உட்படுத்துவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்போதும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் செயல்பாடுகளால், இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மாத்திரமன்றி, பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், சர்வதேச நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையத்தில் இலங்கை அரசு மனுதாரர் இல்லையென்றபோதும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான உரிய தகவல்களை பிரிட்டன் அரசுக்கு தேவையான ஆவணங்களை வழங்கி வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால், அப்போது மிகவும் நெருக்கமாக இந்த வழக்கு தொடர்ந்து கவனிக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

இதற்கிடையே, பிரிட்டன் ஆணையத்தின் தீர்ப்பை இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

காலம் கடந்தேனும் தமிழர்களுக்கு நியாயகம் கிடைத்துள்ளதாகவே, தாம் இந்த தீர்ப்பை பார்ப்பதாக வட பகுதி தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கருத்து…

இந்த தீர்ப்பானது, காலம் கடந்த நீதி என்று வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது, விடுதலை புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையானது, ஒட்டு மொத்த ஈழத் தமிழர்கள் மீதான தடையாகவே தாம் கருதியதாக அவர் குறிப்பிடுகிறார்.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், விடுதலை புலிகள் மீது விதி்த்த தடைதான், ஈழத் தமிழர்கள் அழிவதற்கும் காரணமானதாக அவர் தெரிவித்தார். அதனாலேயே ஈழத் தமிழர் விவகாரத்தில் பிரிட்டனுக்கு முழு பொறுப்பு உள்ளது என்று அவர் கூறினார். இலங்கையில் இழந்த உயிர்கள் மற்றும் மக்கள் இழந்த அனைத்தும் மீள கிடைக்கப் போவதில்லை என்று கூறிய அனந்தி சசிதரன், காலம் கடந்த நீதியை ஈழத் தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய நாடுகளின் தடைக்குப் பின்னணியிலேயே இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான இன அழிப்பை மேற்கொண்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

தற்போதைய தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலை புலிகள் மீது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் விதித்துள்ள தடை, இனிவரும் காலங்களில் தளர்த்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

பிரிட்டன் ஆணையத்தின் தீர்ப்பை, “தமிழர்” என்ற வகையில் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

தமிழர்களின் விடுதலைக்காக போராடிய மிக வல்லமை கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது, சர்வதேச நாடுகள் தடை விதித்தமையினாலேயே, அந்த அமைப்பு 2009ஆம் ஆண்டு அழிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதால், தமிழர்களின் உரிமைகள் இல்லாது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு வரும் நிலையில், விடுதலை புலிகள் தவறிழைக்கவில்லை என்ற வகையிலான பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு, அந்நாட்டு அரசுக்கு ஒரு செய்தியை விடுத்துள்ளதாகவும் சிறிதரன் தெரிவித்தார்.

பிரி்ட்டன் ஆணையத்தின் தீர்ப்பை மதித்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரி்ட்டன் அரசு நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

விடுதலைப் புலிகளின் கொள்கைகளும், எண்ணங்களும் நேர்மையான வழியில் இருந்தது என்பதை ஏற்று, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான, கௌரவமான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கான அழுத்தத்தை பிரிட்டன் தர வேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தினார்.

தமது சொந்த நிலத்திலே வாழ்கின்ற இனத்தை அழித்து, பயங்கரவாத செயற்பாட்டை செய்த இலங்கை அரசாங்கம், சர்வதேசத்தின் மத்தியில் யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகி வருவதை காணக் கூடியதாக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி துளசி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்ட நியமனங்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்ற விதத்திலான தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

இலங்கை தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் எனவும், அவர்கள் இந்த நிலத்திலே சுதந்திரமான வாழ்வதற்கான உரிமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாடுகளை ஏமாற்றி, முள்ளிவாய்க்காலில் பல லட்சக்கணக்கான மக்களை கொலை செய்த இலங்கை அரசாங்கத்தின் மீதான யுத்தக் குற்ற விசாரணைகள் இந்த தீர்ப்பின் ஊடாக சர்வதேசத்தின் மத்தியில் வலுப்பெறும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை தவறானது என்ற தீர்ப்பை வரவேற்கும் அதே வேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் துளசி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு 2009ஆம் ஆண்டு யுத்த மௌனிப்பிற்கு பின்னர், ஆயுத போராட்டத்தை கைவிட்டு, தாயக மண்ணில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், சர்வதேசத்தில் ஏனைய நாடுகள் விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச நாடுகளின் துணையுடன், இலங்கை மண்ணில் பாதுகாப்பற்று உள்ள தமிழ் மக்களுக்கு நியாயப்பாடான தீர்வொன்று கிடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவில்லை என குறிப்பிட்ட முன்னாள் போராளி துளசி, அவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புறக்கணிக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து எவ்வாறு தமிழர்களுக்கான தீர்வை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரிட்டன் ஆணையத்தின் தீர்ப்பானது, இலங்கை தமிழர்களின் நிலைப்பாட்டை பிரதிபலித்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பால் சர்வதேச அளவில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற செய்தி விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த இயக்கத்தின் அமைப்பாளரும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல் கூறினார்.

இலங்கையில் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழர்கள் சார்பாக வல்லரசு நாடொன்றின் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பானது, ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பிரிட்டன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை முழுமையாக வரவேற்பதாகவும் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

(பிபிசி தமிழ்)

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles