இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சய இன்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுடனான இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை புரிந்துள்ளார்.
ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.
இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதனால் 132 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாடியபோது நான்காவது ஓவருக்காக அகில தனஞ்சய தனது இரண்டாவது ஓவருக்கான பந்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டார்.
அகிலவின் அந்த ஓவரின் முதல் பந்துக்கு ஒரு பவுண்டரியை விளாசித் தள்ளினார் லூயிஸ். எனும் அடுத்த பந்தில் மொத்தமாக அவர் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்களுடன் குணதிலக்கவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய கரீபியன் புயல் என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் டக்கவுட்டுடனும், அவரைப் போன்றே விக்கெட் காப்பாளர் நிகோலஷ் பூரணும் தனது முதல் பந்து வீச்சில் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் நான்காவது ஓவருக்கு வீழ்த்தப்பட்டன.
நான்காவது ஓவர் – 4 W W W 1 4
இந்த ஹெட்ரிக் சாதனை டி- 20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பதிவாகும் 14 ஆவது ஹட்ரிக் ஆகும்.
அகில இந்த மூன்று விக்கெட்டுகளுடன் தனது இரண்டு ஓவர்கள் முடிவில் 3-17 என்ற புள்ளிகளைக் கொண்டிருந்தார். எனினும் அதன் பின்னர் அகிலவின் மூன்றாவது ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசி துவம்சம் செய்தார்.
இறுதியாக அகில தனஞ்சய 4-0-62-3 என்ற கணக்கில் தனது பந்து வீச்சு இன்னிங்ஸை முடித்தார்.