29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அநுரவின் நழுவல் வார்த்தைகள்

தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி.) தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸநாயக்க – தமிழ் மக்களின் பிரச்னைகளை தங்களால் தீர்க்க முடியுமென்றும் தங்களுடைய அரசாங்கத்தில் வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் அங்கம் வகிப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால், அவர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் தமிழர் பிரச்னையில் அவர்களுக்குத் தெளிவான பார்வையில்லை என்பதையே காண்பிக்கின்றது.
அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்னையை தீர்ப்பதாகவும் தமிழ் மக்களின் மொழி மற்றும் காணி பிரச்னைகளைத் தீர்ப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். பெருமளவுக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னையை ஒரு மொழிப் பிரச்னையாக நோக்கும் ரோகண விஜயவீர காலத்தின் அணுகுமுறையையே நினைவுபடுத்தியிருக்கின்றார்.
யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும்கூட நல்லிணக்க முயற்சிகள் ஆரம்பநிலையில்கூட முன்னோக்கிப் பயணிக்கவில்லை – இது தொடர்பில் அநுரகுமார சிந்திப்பதாகத் தெரியவில்லை.
அரசமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற விடயங்களை – அதாவது, அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயங்கள் தொடர்பில் நழுவலாகவே வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கின்றார். அதாவது, எதனைக் கூறினால் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதில் பிரச்னை ஏற்படுமோ அவற்றை மிகவும் கவனமாகத் தவிர்த்திருக்கின்றார்.
தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் அதிகாரத்தில் இருக்காத கட்சி – அந்த வகையில், அவர்கள் ஒருவேளை ஆட்சியை கைப்பற்றினால் – இப்படித்தான் இருப்பார்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட முடியாது.
ஆனால், தமிழ் மக்களின் கடந்த கால அனுபவத்தில் அடிப்படையில் நோக்கினால் தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் அணுகுமுறைகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் அணுகுமுறைக்கும் இடையில் பெரியளவில் வேறுபாடுகளை காண முடியவில்லை.
ஊழல் ஒழிப்பு மற்றும் அதிகார துஷ்பிரயோகமற்ற ஆட்சி என்னும் கண்ணோட்டத்தில் நோக்கினால் அவர்களைப் போன்றவர்கள் நாட்டுக்கு நன்மை செய்யக் கூடியவர்களாக இருக்கலாம்.
ஆனால், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்னும் வகையில் – இலங்கையர்கள் என்னும் அடிப்படையில் சிந்திக்க முடியாதுள்ளது.
அவ்வாறு சிந்திப்பதற்கான அரசியல் சூழல் இலங்கைத் தீவில் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் பதற்றங்களை அதிகரிக்கக் கூடியவாறான விடயங்களே நடந்து கொண்டிருக்கின்றன.
தேசிய மக்கள் சக்தி இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அமைதியாகவே இருக்கின்றது. இதுவரையில், தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைப்பது, இந்து மத விடயங்களை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாதிருப்பது, மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் அநுரகுமார தனது பார்வையை எங்குமே பதிவு செய்யவில்லை ஏன்?
தென்னிலங்கையின் பிரதான கட்சிகளிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்றால் – அந்த வேறுபாட்டை அநுரகுமார நிரூபிக்க வேண்டும்.
அவ்வாறில்லாது நாங்கள் வந்தால் செய்வோம் என்பது சரியானதோர் அரசியல் அணுகுமுறையல்ல. ஏனெனில், இதனைத்தானே ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித்பிரேமதாஸ ஆகியோரும் கூறிவருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles