அனுமதி பத்திரம் வழங்க இலஞ்சம் பெற்ற இருவருக்கு விளக்கமறியல்

0
61

பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் தனியார் பஸ் ஒன்றுக்கு “C” தரம் அனுமதி பத்திரம் வழங்க 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவரை மார்ச் மாதம் (04) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்காதினி நேற்று (20.02.2024) மாலை உத்தரவு பிறப்பித்தார்.

மத்திய மாகாண பொது போக்குவரத்து திணைக்களத்தை சேர்ந்த நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான மாவட்ட முகாமையாளர் மற்றும் மேலும் ஒரு அதிகாரியை கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த இலஞ்சம் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் நேற்று (20) பகல் நுவரெலியாவில் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு அதிகாரிகளை நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்காதினி முன்னிலையில் (20) மாலை முன்னிலை படுத்தினர்.

இதன் போது விசாரணையை மேற்கொண்ட நீதிபதி குறித்த இரு அதிகாரிகளையும் எதிர்வரும் (04.03.2024) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

அதேநேரத்தில் சந்தேக நபர்களின் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி சந்தேக நபர்களில் ஒருவரான மாவட்ட முகாமையாளருக்கு சக்கரை நோய் மற்றும் இதய நோய் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனை கருத்திற் கொண்டு நோய்வாய்க்கு உள்ளான சந்தேக நபரை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இவர்கள் தொடர்பான வழக்கை (04.03.2024) வரை ஒத்தி வைத்த நீதிபதி வழக்கு தினத்தில் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.