வடக்குக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தையும் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனையும் யாழ்ப்பாணத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசியபோது தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய கேள்விகளை கேட்டாரென செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக செயல்பட்ட தமிழ்க் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன? இந்தக் கட்சிகளால் ஒற்றுமையாக செயல்பட முடியாதா? அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? இவையே அமெரிக்கத் தூதுவர் எழுப்பிய கேள்விகள். அவற்றுக்குப் பதிலளித்த பொன்னம்பலம் தங்களைப் பொறுத்தவரை, ஒற்றையாட்சி மற்றும் அரசமைப்பின் 13ஆவது திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே கூட்ட மைப்பில் இருந்து வெளியேறவேண்டி வந்தது என்றும் அந்த நிலைப்பாட்டில் தாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர் எனவும் கூறியிருக்கிறார்.
மற்றைய தமிழ்க் கட்சிகள் பிரிந்து நிற்பதற்கான காரணம் தங்களுக்கு விளங்கவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், கொள்கையளவில் அந்தத் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் வேறுபாடுகள் இல்லை என்பதால் அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளை அவர்களிடமே கேட்டறிய வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவரிடம் கூறிவைத்தாரென அந்த செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. பொன்னம்பலம் அளித்த பதில் அவரின் முன்னணி மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியம் ஒருபோதும் தோன்றப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா முதற்தடவையாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தபோது தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கான தீர்வு தொடர்பில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்குமாறு கேட்டுக்கொண்ட வேளையிலும் பொன்னம்பலம் மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் அத்தகைய ஒன்றுபட்ட நிலைப்பாட்டுக்கு வருவதில் உள்ள சிக்கல்களை நேரடியாகவே கூறியிருந்தார். அவருடைய நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருப்பது வேறு விடயம். ஆனால், அவர் மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு சாத்தியமில்லை என்பதிலும் தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பான நிலைப்பாட்டில் சமரசத்துக்கு இடமில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
அத்தகைய ஒரு பிடிவாதமான நிலைப்பாட்டின் மூலமாக தாங்கள் இதுவரையில் சாதித்தது என்ன என்பதை தமிழ் மக்களுக்கு கூறினால் நல்லது. கொள்கைகளைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் இல்லாத மற்றைய தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதற்கான காரணங்களை அந்தக் கட்சிகளின் தலைவர்களிடமே கேட்கவேண்டும் என்று பொன்னம்பலம் கூறியதைக் கேட்ட ஜூலிசங் அந்த தலைவர்களைச் சந்தித்தாரென இந்த ஆசிரிய தலையங்கத்தை எழுதிய தருணம் வரை தகவல் இல்லை.
அவர் இலங்கையில் தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு விரைவில் அமெரிக்கா திரும்பவிருப்பதால் தமிழ்க் கட்சிகள் பிரிந்து நிற்பதற்கான உண்மையான காரணங்களை அறியாமலேயே போய் விடவும் கூடும். இறுதியாக, பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக அமெரிக்கா ஒருபோதும் செயல்படாது என்றும் பொன்னம் பலத்திடம் ஜூலிசங் கூறியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவே புறம்பாகச் செயல்பட முடியாததாக அப்படி வடக்கு, கிழக்கு தமிழ் வாக்காளர்கள் வெளிப்படுத்தக்கூடிய நிலைப்பாட்டின் இலட்சணத்தை பார்ப்பதற்கு ஓர் இருபது நாட்கள்தானே – அமைதியாகப் பொறுத்திருப்போம்.