நாட்டின் உள்ளக விவகாரத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வது நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடாயின், ஐக்கிய நாடுகள் சபையின் தாபனங்களிடமிருந்து உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதும் நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடு என குறிப்பிட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார ஆகியோரே முதலாவதாக நாட்டின் உள்ளக விவகாரத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். மேற்குலக ஆதிக்கம், மற்றும் போராட்டம் ஆகியவற்றை தொடர்ந்து சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மாநாடும் இடம்பெற்றதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. நாடு என்ற ரீதியில் ஒருபோதும் தனித்து செயற்பட முடியாது. மனித உரிமைகள்,சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஒவ்வொரு அமைப்புக்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் போது உலக உணவு தாபனமும், மருந்து தட்டுப்பாடு ஏற்படும் போது உலக சுகாதார தாபனமும் உதவி செய்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையிடம் நாட்டை காட்டிக்கொடுப்பதாக குறிப்பிடும் தரப்பினர் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்வதையும் காட்டிக் கொடுப்பாகவே கருத வேண்டும்.
நாட்டின் உள்ளக விவகாரத்தை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே முதலில் சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சியில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என குறிப்பிட்டுக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவும், வாசுதேவ நாணயக்காரவும் சர்வதேச அரங்கிற்கு சென்றார்கள். இவர்களின் அரசியல் பற்றி கதைப்பது நகைச்சுவையானது. நாடு வரலாற்றில் என்றுமில்லாத வகையில் வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. போர் மற்றும் இயற்கை காரணிகளினாலும், பிற தரப்பினராலும் நாடு வங்குரோத்து நிலையை அடையவில்லை. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் தவறான பொறுப்பற்ற தீர்மானங்களினால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களை முழுமையாக ஏமாற்றி பொதுஜன பெரமுன ஆட்சியமைத்தது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடையில் ரஷ்ய ஜனாதிபதி புடின், லீ குவான் யூ,மாதீர் மொஹமட், அநகாரிக தர்மபால உள்ளிட்ட பல தலைவர்கள் வருகை தந்தார்கள். சிறந்த தலைவர்களுடன் பலவீனமான ஒருவரை ஒப்பிட்டு முழு நாட்டையும் தவறாக வழிநடத்தியவர்கள் இன்று லீ குவான் மற்றும் மாதீர் மொஹமட் ஆக ஒப்பிட்டவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதியின் முட்டாள்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிற்துறையை தமது வாழ்வாதாரமாக நம்பியுள்ள பெருந்தோட்ட மக்கள் இன்று மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தூரநோக்கமற்ற வகையில் இரசாயன உரம் தடை செய்யப்பட்டமையால் குறுகிய காலத்தில் தேயிலை தொழிற்துறை 40 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் சிலோன் டி நாமம் எம்மை விட்டு நீங்கும் அச்சுறுத்தல் நிலையில் உள்ளது.
இலங்கையின் தேயிலை தொழிற்துறைக்கு சர்வதேச சந்தையில் போட்டித்தன்மையில் உள்ள இந்தியா, கென்யா ஆகிய நாடுகள் தங்களின் தொழிற்துறையை ஊக்குவிக்க இரசாயன உர நிவாரணத்தை தமது தொழிற்துறையினருக்கு வழங்கியுள்ளது. புதிய கொள்கை திட்டங்கள் அறிவு பூர்வமாக செயற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை. ஆனால் அரசியல் தரப்பினரை திருப்திப்படுத்த 38 இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை அமைச்சினை விஸ்திரப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.