இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியை முன்னின்று நடத்த தயார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் உரிமைத்துவத்தைக் கொண்டுள்ள பாகிஸ்தான் முன்வைத்த விசேட திட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிராகரித்ததை அடுத்தே ஆசிய கிண்ண களத்தில் இலங்கை குதித்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் பேரவை அனுமதித்தால் 2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கை தயார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவுனத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டெம்பர் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், போட்டிகள் எங்கு நடைபெறும் என்பதில்தான் தொடர்ந்தும் இழுபறி நிலவுகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் முன்வைத்துள்ள புதிய யோசனை பாகிஸ்தானை பேரிடியாக தாக்கியுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இரண்டு நாடுகளில் நடத்துவதற்கான திட்டம் ஒன்றை பாகிஸ்தான் முன்வைத்திருந்தது. ஆனால், அதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உடன்படவில்லை.
மேலும் ஆசிய கிண்ணப் போட்டியை எங்கு? எப்போது? நடத்துவது என்பது குறித்து அஹமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எடுக்கப்படவில்லை. யோசனைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது.
நரேந்த்ர மோடி விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் ஜெய் ஷா தலைமையில் நடைபெற்ற அக் கூட்டத்தில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உட்பட ஆசிய கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜாம் சேதி மாத்திரமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இலங்கை சார்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, கௌரவ பொதுச் செயலாளர் மொஹான் டி சில்வா, பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா ஆகியோர் இக் கூட்டத்தில் பங்குபற்றினர்.