ஆட்சியாளர்கள் சிலரின் ஊழல்மோசடிகளே நாட்டின் வங்குரோத்து நிலைக்குக் காரணம் – சந்திரிகா

0
141

ஆட்சியாளர்களின் சிலரின் ஊழல்மோசடி செயற்பாடுகளே தற்போது நாடு முழுமையாக வங்குரோத்துநிலையை அடைந்திருப்பதற்கான பிரதான காரணமென முன்னாள் ஜனாதிபதியும் தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி நாட்டுமக்களின் மனங்களில் பிரிவினை எண்ணம் இல்லை. மாறாக சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில் பிரிவினை எண்ணத்தை விதைக்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் எவ்வித இன, மத, மொழி ரீதியான பேதங்களுமின்றி அனைத்து மக்களும் ஒன்றுகூடியமையே அதற்குச் சான்றாகும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.  

தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனமானது நெதர்லாந்து தூதரகத்தின் அனுசரணையுடன் ‘பெண் கவுன்சிலர்கள் மூலம் நல்லிணக்கம்’ என்ற செயற்திட்டத்தை கடந்த 2021 அக்டோபர் மாதம் ஆரம்பித்தது. 

உள்ளுராட்சி மன்றங்களில் இயங்குநிலையிலுள்ள பெண் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் அடிமட்டத்திலிருந்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்திட்டத்தின் வருடாந்தப்பூர்த்தியை முன்னிட்டு நேற்று புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதன்படி தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அவ்வுரையில் அவர் மேலும் கூறியதாவது:

பெண்கள் வலுவூட்டலை இலக்காகக்கொண்டு கடந்த காலங்களிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பெரும்பாலான செயற்திட்டங்களுக்கு நெதர்லாந்து அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்பை வழங்கிவருகின்றது. அந்தவகையில் இலங்கையில் பலவருடகாலப்போராட்டத்தின் பின்னர் பெண்களுக்கென உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத கோட்டா கட்டாயமாக்கப்பட்டது. 

ஆனால் 52 சதவீத பெண்கள் சனத்தொகையைக்கொண்ட நாட்டில் பெண்களுக்கென குறைந்தபட்சம் 35 சதவீத கோட்டா ஒதுக்கப்படவேண்டுமெனினும், இதனை வரவேற்கத்தக்கதோர் ஆரம்பமாக நோக்கமுடியும். 

இருப்பினும் பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களில் ஆண்கள் பெண் உறுப்பினர்களை முறையற்ற விதத்தில் நடத்துவதையும், பாலியல் ரீதியில் தவறாக அணுகுவதையும் அவதானிக்கமுடிகின்றது. எனவே பெண் உறுப்பினர்களுக்கு உரியவாறான முகாமைத்துவம் சார்ந்த பயிற்சிகளை வழங்கவேண்டிய பொறுப்பு அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்றது.

தற்போது நாடு பொருளாதார ரீதியில் முழுமையாக வங்குரோத்துநிலையை அடைந்திருக்கின்றது. இதற்கு சில ஆட்சியாளர்களின் ஊழல்மோசடிகள் மாத்திரமே பிரதான காரணமாகும். எனவே நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதன் மூலம் இதற்குத் தீர்வுகாணமுடியாது. எமது அரசு வங்குரோத்துநிலையை அடைந்திருக்கின்றது என்றால் நாமனைவரும் வங்குரோத்துநிலையை அடைந்துவிட்டோம் என்பதே அதன் பொருளாகும்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே எமது தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனமானது நாடளாவிய ரீதியில் ‘பெண் கவுன்சிலர்கள் மூலம் நல்லிணக்கம்’ என்ற செயற்திட்டத்தை முன்னெடுத்துவருகின்றது. 

பல்வேறுபட்ட சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதும், அமைதியை நிலைநாட்டுவதுமே இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அனைவரும் தம்மைச்சூழவுள்ள சமூகங்களின் பல்லினத்தன்மை, மொழி, கலாசாரம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கவேண்டும். 

நானறிந்தவரை கொழும்பிலுள்ள சிங்களப்பிள்ளைகள் தமிழ்ப்பிள்ளைகளுடனும் தமிழ்ப்பிள்ளைகள் சிங்களப்பிள்ளைகளுடனும் கலந்துரையாடுவதற்குப் பின்நிற்கும் போக்கு காணப்பட்டது. பாடசாலை மட்டத்திலேயே சிறுவர்களை இன, மத, மொழியியல் ரீதியில் வேறுபிரித்து, தனித்தனியாகப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்ற தவறான நடவடிக்கையே இவற்றுக்குக் காரணமாகும்.

சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். தேர்தல் பிரசாரங்களின்போது சிங்கள அரசியல்வாதிகள் இது தனிச்சிங்கள பௌத்த நாடு என்றும், தமிழ் அரசியல்வாதிகள் தமக்குரிய தனிநாட்டை வழங்கவேண்டும் என்றும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு ஈடான பிறிதொரு விடயத்தை முன்னிறுத்தியும் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். 

இருப்பினும் அண்மையில் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்களின்போது அவற்றில் எவ்வித இன, மத, மொழிபேதங்களுமின்றி நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்ட அதிசயத்தைக் காணமுடிந்தது. சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மதகுருமார் அங்கு ஒன்றுகூடியமையினையும், முதன்முறையாக முஸ்லிம்கள் பொது இடமொன்றில் அனைத்து மதத்தவர்களினதும் பங்கேற்புடன் நோன்பு திறந்ததையும் அவதானிக்கமுடிந்தது. 

இதன்மூலம் நாட்டுமக்களின் மனங்களில் பிரிவினை எண்ணம் இல்லை என்பதையும், மூன்றாம் தரப்பினரான அரசியல்வாதிகளே அவ்வெண்ணத்தை விதைக்கின்றார்கள் என்பதையும் தௌ;ளத்தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது. 

ஆகவே நாம் எமது சமூகத்தில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேம்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.