அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அமெரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அவற்றை கொள்முதல் செய்வதற்காக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அவசர தேவைக்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் வழங்கியவுடன், நாடு முழுவதும் தடுப்பூசியை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த டிரம்ப் நிர்வாகம் தயாராக உள்ளது என வெள்ளை மாளிகை கூறி உள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசியின் 40 மில்லியன் டோஸ்கள் கிடைக்கும் என்று நம்புவதாகவும், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஐந்து மடங்கு வேகமான தடுப்பூசி என்றும் வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு செயலாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி டிரம்பால் மட்டுமே இது சாத்தியமானதாகவும், இதன்மூலம் ஏராளமான அமெரிக்க உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வெள்ளை மாளிகை இந்த தகவலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.