29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் அமெரிக்கத் துருப்புகள்: அங்கே அவர்கள் கொடுத்த விலை என்ன?

அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின் 20வது நினைவு தினத்தில் ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற அமெரிக்க இராணுவத்தினர் அனைவரும் நாடுதிரும்பியிருப்பார்கள் என அமெரிக்க அதிபர் பைடன் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற கிட்டத்தட்ட 2500 இராணுவத்தினரின் தற்போதைய நிலை தொடர்பாகவும் அவர்களின் கடந்த இருபது வருடப்பணி தொடர்பாகவும் இக்கட்டுரை ஆராய்கிறது.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகள்

ஆப்கான் நாட்டின் பாதுகாப்புப்படையினருக்குத் துணையாக இருந்து, அவர்களுக்கு அறிவுரை கூறி உதவும் பணியில், கிட்டத்தட்ட 2500 அமெரிக்க இராணுவத்தினர் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்று பென்ரகன் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறது. பயிற்சியளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் படையினரின் எண்ணிக்கை உள்ளடக்கப்படாததால் அங்குள்ள மொத்த இராணுவத்தினரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆப்கான் படையினருக்குப் பயிற்சியளிக்கும் பிறிதொரு பணியில் நேற்றோ (NATO) அமைப்பைச் சேர்ந்த 7000 மேலதிக துருப்புகளும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கிறார்கள். அமெரிக்கத் துருப்புகள் அனைவருமே மீள அழைக்கப்படவிருக்கும் இத்தருணத்தில் இப்படையினரைத் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் தங்க வைப்பது தொடர்பாக நேற்றோ அமைப்பு முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 2020 பெப்ரவரி 8 இல் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர் அங்கே வேறு எந்த அமெரிக்க இராணுவமும் கொல்லப்படவில்லை.

அந்த இராணுவத்தினர் கொல்லப்பட்ட சில வாரங்களில், ட்ரம்பின் நிர்வாகம் தலிபான் போராளிகளுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது. அமெரிக்கப் படையினரைத் தாக்குவதை தலிபான்கள் நிறுத்தும் பட்சத்தில், இவ்வருடம் மே மாதம் 1ம் திகதிக்குள் அனைத்து அமெரிக்கப் படையினரும் விலக்கப்படுவார்கள் என்று அந்த ஒப்பந்தம் குறிப்பிட்டிருந்தது.

அந்நேரத்திலிருந்து அமெரிக்கத் துருப்புகள் மேல் தாக்குதலைத் தொடுப்பதை தலிபான்கள் நிறுத்தியிருந்தார்கள். ஆனால் அதே வேளையில் ஆப்கான் படையினருக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்கும் எதிரான தாக்குதல்களை தலிபான்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் செப்ரெம்பர் 11இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பழிவாங்குவதற்காக அல்குவைதா இலக்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல்களுடன் 2001, ஒக்ரோபர் 7 இல், ஆப்கானில் அமெரிக்க யுத்தம் தொடங்கப்பட்டது. தமது பயங்கரவாதத் தாக்குதல்களை அல்குவைதா முன்னெடுக்கக்கூடிய வகையில் ஒரு பாதுகாப்புத் தளத்தை தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு வழங்கியிருந்தது.

ஒரு சிறிய எண்ணிக்கையைக் கொண்ட விசேட தாக்குதல் படைகள் (special operations forces) வடக்குக் கூட்டணிக்கு உதவ, அவர்கள் வெற்றிகரமாக தலிபான் அரசை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள்.

தெற்கு ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் அமைந்துள்ள ஒரு தளத்துக்கு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினர் வந்துசேர்ந்ததைத் தொடர்ந்து 2001ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 2300க்கு உயர்ந்தது.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, 2009ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 15000 தொடக்கம் 25000 வரை இருந்தது. 2009ம் ஆண்டில் ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்த போது அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையும் அவ்வருடம் அதிகரித்தது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் தலிபான்களின் வெற்றிகரத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக அதிபர் பரக் ஒபாமா, மேலதிகமாக 33000 படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பினார்.

முதற்தடவையாக, 2010 ஆகஸ்டில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை 100,000 ஐத் தாண்டியது. அடுத்த வருடமும் இராணுவத்தினரின் எண்ணிக்கை இதே அளவாகவே இருந்தது.

போருக்குக் கொடுக்கப்பட்ட விலை

மொத்தமாக 2312 அமெரிக்க இராணுவத்தினர் 2001ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் இறந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்கான தாக்குதல் (Operation Enduring Freedom) என்ற பெயருடன் முதன்முதலில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 2218 இராணுவத்தினர் இறந்தார்கள் என்பதோடு சுதந்திரத்தைக் காக்கும் தாக்குதல் (Operation Freedom’s Sentinel) என்ற பெயரில் 2014ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட, பயிற்சியளிக்கும் படையணியைச் சேர்ந்த 94 இராணுவத்தினரும் இதுவரை இறந்திருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் 2009இல் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து கொல்லப்படும் அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த 1534 இராணுவத்தினர் 2009க்கும் 2014க்கும் இடையில் ஆப்கானில் இறந்தார்கள். ஆப்கானிஸ்தானில் காயப்பட்ட அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, 20,066 இராணுவத்தினர் 2001ம் ஆண்டிலிருந்து இன்று வரை காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஆப்கான் போரில் கிட்டத்தட்ட 35000 இலிருந்து 40000 வரை அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. பிரவுண் பல்கலைக்கழகத்தால் (Brown University) முன்னெடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி 43000 பொதுமக்கள் போரில் கொல்லப்பட்டதாகவும் அதே வேளையில், அமெரிக்க – தலிபான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வன்முறைகள் அதிகரித்த போது  2001 இலிருந்து 2019 வரை, 35,518 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை கணிப்பிட்டது.

பென்ரகன் தெரிவித்துள்ள தகவல்களின்படி, கடந்த வருடத்தின் இறுதி வரை 824.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவச் செயற்பாடுகளுக்காக மொத்தமாகச் செலவிடப்பட்டுள்ளது. இத்தொகையில், 578.5 பில்லியன் டொலர்கள் சுதந்திரத்துக்கான தாக்குதலுக்கும், 264.4 பில்லியன் டொலர்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தாக்குதலுக்காகவும் செலவிடப் பட்டிருக்கின்றது.

ஒரு மாதத்துக்கு சராசரியாக 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் செயற்பாடுகளுக்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செலவு செய்திருக்கின்றது.

உயர்மட்டப் பயங்கரத் தாக்குதல்கள்

தலிபான்களின் தாக்குதல்கள், உலங்கு வானூர்தி விபத்துகள், தமக்குப் பயிற்சியளித்த அமெரிக்கப் படையினருக்கு எதிராக ஆப்கான் இராணுவத்தின் உள்ளேயிருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எனப் பல உயர்மட்டத் தாக்குதல் நிகழ்வுகள் ஆப்கானிஸ்தானில் நடந்தேறியிருக்கின்றன.

சீல் கடற்படையினரை (NAVY SEALs) ஏற்றிக்கொண்டு கிழக்கு ஆப்கானிஸ்தானுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்த, CH-47 ஷினூக் உலங்கு வானூர்தி (Chinook helicopter) ரொக்கெட்டினால் ஏவப்பட்ட கைக்குண்டின் மூலம், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட நிகழ்வே, அமெரிக்க இராணுவத்தினருக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. இருபத்தியிரண்டு (22) சீல் கடற்படையினர் உட்பட 30 அமெரிக்கர்கள் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

விசேட தாக்குதல் படையணியைச் சேர்ந்த 19 இராணுவ வீரர்கள், சிவப்பு சிறகுகள் தாக்குதல் (Operation Red Wings) எனப்பெயரிடப்பட்டு 2005ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்டார்கள். பதுங்கியிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேற்குறிப்பிட்ட நிகழ்வில் அமெரிக்க இராணுவத்தினருக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த மேலும் 16 படையினர் கொல்லப்பட்டார்கள்.

வனத் சண்டை (Battle of Wanat) என அழைக்கப்படுகின்ற அமெரிக்க அவதான நிலை ஒன்றின் மீது 2008 ஜூலை 13 இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது, ஒன்பது அமெரிக்கர்களும் வேறு 27 பேரும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்கள்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நூறிஸ்தான் மாகாணத்தின் காம்டேஷ் நகரில் ஒரு மலையடிவாரத்தில் பாகிஸ்தானிலிருந்து உள்நுழையும் தலிபான்களுக்கு எதிராகப் போரிடுவதற்காக சண்டைக்கான கீற்றிங் தொலைநிலை (Combat Outpost Keating) என அழைக்கப்பட்ட ஒரு விசேட இராணுவ முகாமை அமெரிக்க இராணுவத்தினர் நிறுவியிருந்தார்கள். இந்தத் தளத்தின் மீது 2009 ஓக்ரோபர் 3இல், கிட்டத்தட்ட 200 தலிபான்கள் திடீரெனத் தொடுத்த தாக்குதலில், எட்டு அமெரிக்க இராணுவத்தினரும் நான்கு ஆப்கான் படையினரும் கொல்லப்பட்டார்கள்.

ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த இரட்டை உளவாளியான (double agent) அல்-பாலாவியால் சப்மான் முன்னணி இயங்குதளத்தில் (Forward Operating Base Chapman) நிலைகொண்டிருந்த அமெரிக்க சிஐஏ படையினரை ஏமாற்றி, அவர்கள் நடுவில் 2009 டிசம்பர் 30ம் திகதி மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலின் காரணமாக ஏழு சிஐஏ பணியாட்கள் கொல்லப்பட்டார்கள்.

கறுப்புப் பருந்து உலங்கு வானூர்தி (Black Hawk helicopter) ஒன்று 2010ம் ஆண்டு செப்ரம்பர் 21ம் திகதி காலாட் என்னும் இடத்தில் விபத்துக்குள்ளாகிய போது 101வது விமானப்படைப்பிரிவைச் சேர்ந்த ஐந்து வீரர்களும் சீல் கடற்படையினர் மூவரும் கடற்படையினருக்கு உதவி வழங்கும் விசேட தொழில்நுட்பவல்லுநர் ஒருவரும் கொல்லப்பட்டார்கள்.

எட்டு அமெரிக்க விமானப்படை வீரர்களும் அமெரிக்க ஒப்பந்தகாரர் ஒருவரும் 2011 ஏப்பிரல் 27ம் திகதி, காபுல் விமானநிலையத்தில் கொல்லப்பட்டார்கள். விமானத் தளத்தின் செயற்பாட்டு அறையில் பணியாற்றிய ஆப்கான் விமானப்படை வீரர் ஒருவர் ஒரு விவாதத்தின் போது கோபப்பட்டு திடீரெனத் தனது துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்கினார். இந்த சம்பவத்தின் போது காயப்பட்ட குறிப்பிட்ட வீரர் சம்பவத்தின் இறுதியில் சாவடைந்தார்.

ஆப்கானில் நிலைகொண்டிருந்த  அமெரிக்க இராணுவத்தின் மூன்றாவது பெரிய இராணுவத் தளமாக விளங்கிய சலேர்ணோ முகாம் (Camp Salerno) மீது தலிபான்கள் தொடுத்த ஒன்றிணைக்கப்பட்ட தாக்குதல் காரணமாக 2013 நவம்பர் முதலாம் திகதி இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்ட அதே நேரம் பலர் கடுமையான காயங்களுக்கும்  உள்ளானார்கள்.

தமிழில் ஜெயந்திரன்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles