ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக நீர்வழி விமானச் சேவையைப் புன்னமிகாட்டில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று ஆரம்பித்து வைத்தார். விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து ஸ்ரீசைலம் செல்லும் முதல் கடல் விமானம் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருடன் புறப்பட்டது.
மீண்டும் இருவரும் அதே விமானத்தில் விஜயவாடா வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.ஒரே விமானத்தின் மூலம் நீரிலும் ஆகாயத்திலும் பறக்கும் புது அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் வகையில் இந்த விமானச் சேவை இயக்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி விஜயவாடாவின் கிருஷ்ணா நதிக் கரையில் இருந்து நேற்று பரீட்சார்த்த சேவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், பொலிஸார், சுற்றுலாத் துறை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட அதிகாரிகள் குழு மேற்பார்வையிட்டிருந்ததாகவும் ஆந்திர மாநில செய்திகள் குறிப்பிட்டுள்ளன.