இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இந்தூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.இந்தநிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமது இந்தியப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைநோக்கு ஆவணமொன்றில் கைச்சாத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கான பகுதிகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.இதனை ஜனாதிபதி அனுரகுமார முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், இந்த தொலைநோக்கு ஆவணத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தாம் கருதுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.