27 C
Colombo
Wednesday, October 23, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது!

இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்றாகிவிட்டது. ஏனெனில் தமிழ் மக்கள் முன்னர் நடந்தவற்றை – அல்லது முன்னர் ஒருவர் கூறியவற்றை இலகுவாக மறந்து விடுவார்கள் என்று நம்புகின்றனர். அது கூட ஒரு வகையில் உண்மையானதுதான். சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஒன்றில் வந்த காட்சி ஒன்று இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. நடிகர் விஜய் அமெரிக்காவில் வாழும் உலக பணக்காரர்களில் ஒருவர், தமிழ் நாட்டில் நடக்கும் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னைக்கு வந்து வாக்களிக்க, வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றால் அவரது வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியிருப்பார்.

அதனால் அவருக்கு வாக்களிக்க முடியாமல் போய்விடும். அவர் தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் ‘ரக்சி’ ஒன்றை பிடித்துக்கொண்டு தேர்தல் அலுவலகத்தில் முறையிடுவதற்காக செல்வார். அப் போது ஓர் அரச அலுவலகத்தை கடந்து செல்லும்போது அந்த அலுவலகத்திற்கு முன்னால் ஒரு பெண் தன்னைத்தானே தீமூட்டி தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் ஒன்றை ‘ரக்சி டிரைவர்’ விபரிப்பார். விஜய்யும் ஆச்சரி யத்துடன், ‘நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று ரக்சி டிரைவரை கேட்பார். ‘ஒரு வாரம் முழுக்க நாங்கள் அதைப்பற்றித் தான் பேஸ்புக், டுவிற்றர் என்று எல்லாத்திலும் பேசிக்கொண்டி ருந்தோம்.’ என்பார். அவர், அப்புறம் என்று கேட்டதும், டக்சி டிரைவர் சொல்வார், ‘வேறு ஒரு பிரச்னை வந்திட்டுது சேர், பிறகு அதைப்பற்றி பேசத் தொடங்கீற்றம்…’ என்பார். அதுபோலத்தான், நாமும் ஒரு பிரச்னையைப்பற்றி கதைத்துக் கொண்டிருப்போம், பின்னர் ஒரு புதிய பிரச்னை வந்ததும், பழையதை மறந்துவிடுவோம்.

இது நமது அரசியல்வாதிகளுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அதனால்தான் அவர்களும் தொடர்ந்து தவறுகளைச் செய்து கொண்டே இருக்கின்றார்கள். ஜனாதிபதி தேர்தல் வரை தமிழ் பொதுவேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்தை ‘உடைப் பேன்… கவிழ்ப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்தவர், இப்போது யாரோ அதனை திருடிவிட்டார்கள்’ என்று கண்ணீர் வடிக்கிறார். இதுபோலத்தான், தமிழ் அரசின் மாவை சேனாதிராசாவும் அவ்வப்போது பழையதை மறந்து எதையாவது கூறிக்கொண்டிருக்கின்றார். கடைசியாக அவர் திருவாய் மலர்ந்திருப்பது, ‘வழக்குகளைத் தொடர்ச்சியாகத் தாக்கல்செய்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்கச் சிலர் கனவு காண்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.’ தமிழ் அரசை முடிக்குவதற்கு வெளியே இருந்து யாரும் வரவில்லையே. நீங்கள் தலைவராக இருந்து செய்த காரியங்களால்தானே, வழக்குகள் ஒன்றுவிட்டு ஒன்று வந்துகொண்டிருக்கின்றது.

நீங்கள் என்னடா என்றால் அதற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல யாரோ முடக்க நினைக்கிறார்கள் என்று, வேறு ஒருவர் மீது பழியைப்போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தமிழ் மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று நீங்கள் நினைப்பதுபோல அல்லவா இருக்கின்றது. அண்மையில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அதற்கான கடிதத்தை அனுப்பிவிட்டதாகவும் சொல்லியிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். கட்சியின் யாப்பை ஒருதடவையாவது படித்திருந்தால், அந்த கடிதத்தை யாருக்கு அனுப்பவேண்டும் என்பதாவது தெரிந்திருக்கும். நீங்கள் செயலாளருக்கு அனுப்பவேண்டிய கடிதத்தை தெரிவுசெய்யப்பட்டபோதிலும் பதவியேற்க முடியாத தலைவராக ‘பரிதாபத்துக்குரிய தலைவராக’ இருக்கும் ஒருவருக்கு அனுப்பியிருக்கமாட்டீர்கள். இப்படித்தான், கட்சி யாப்புக்கு முரணாக பொதுச்சபைக்கு ஆட்களை நியமித்ததால்தானே கட்சி நீதிமன்ற படிக்கட்டுக்களை ஏறவேண்டிவந்தது.

இப்போதும், கட்சியின் யாப்புப்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை கட்சி மாநாட்டைக்கூட்டி புதியவர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும் என்பதை நீங்கள் செய்யாததால்தானே, மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள்தான். அதற்காக நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் மக்கள் நம்புவார்கள் என்று நினைத்துக்கொண்டு என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம் என்று நினைப்பது உங்பகளுக்கு அழகானது அல்ல. ‘எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின்போது எம்மால் பிரேரிக்கப்பட்ட பல வேட்பா ளர்களைப் புறந்தள்ளி சிலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து வேட்பாளர்களை நியமித்துள்ளமை உண்மைதான். அதனை நான் ஏற்கவில்லை. அதனால்தான் இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து விலகிநிற்கின்றேன்.’ இப்படியும் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கிறார். அவரது துணிச்சல் பாராட்டுக்குரியதுதான். ஒரு தலைவராக வெட்கத்தை மறந்து சொல்வது என்பதும் துணிச்சலானது தான்.

-ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles