32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

ஒருநாள் அதிகாலை தொலைபேசி மணி அடித்தது.
இந்த அகாலவேளையில் யாரடா என்று சலித்தவாறே தொலைபேசியை எடுத்தபோது எதிர்முறையில் நண்பர் முருகபூபதி பேசினார்.
அவுஸ்திரேலியாவில் வாழும் மூத்த எழுத்தாளர் – பத்திரிகையாளர் – விமர்சகர் என்று பன்முகம்கொண்டவர் அவர்.
சற்று பதற்றத்துடனேயே கேட்டார், ‘வித்தியருக்கு என்ன நடந்தது?’, என்று.
எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
‘ஏன் என்ன?’ என்றுகேட்டேன்.
‘இல்லை இன்று தனது பத்திரிகையில் நாளையிலிருந்து ஆசிரியர் பதவியிலிருந்து விலகுவதாக எழுதியிருக்கிறார்’ என்றார் அவர்.
அப்போதுதான், ‘அட இதுக்குத்தானா? என்றவாறு, அது வேறு ஒன்றுமில்லை, அவர் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக போட்டியிடவிருக்கிறார் என்று அறிந்தேன்.
அதற்காக இருக்கலாம்’ என்றேன்.
அவருக்கு மேலும் ஆச்சரியமாகபோய்விட்டது.
‘என்ன, அந்த சாதாரண மேயர் பதவிக்காக பத்திரிகை ஆசிரியர் பதவியை விடுகின்றாரா?’ என்று திரும்பவும் கேட்டார் முருகபூபதி.
ஊடக உலகில் ‘ஊடக ஜாம்பவான்’ என்று வர்ணிக்கப்படுபவர் நண்பர் வித்தியாதரன்.
கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராவதற்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்தபோது அதனை ஏற்க விரும்பாதவர்.
அந்த சந்தர்ப்பமே அவரின் உறவினர் ஒருவர் அந்தப் பதவிக்கு வர உதவியது என்பது வேறு கதை.
பின்னர் வடக்கு மாகாணத்துக்கு முதன்முதலில் தேர்தல் நடைபெற்றபோது, முதலமைச்சர் வேட்பாளராக அவரின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டதுண்டு.
இப்போது அவர் யாழ்ப்பாண மாநகர தேர்தலில் ஒரு வேட்பாளர்.
அவரைப்போல இன்னும் நாற்பத்து நான்கு பேர் வேட்பாளர்களாக இருக்கிறார்கள்.
அவர்களில் தற்போதைய மேயர் ஆனல்ட்டும் ஒருவர்.
முதலில் வித்தியின் பெயரை சிபாரிசு செய்தவர், யாழ்ப்பாண மாநகர நிர்வாகத்தில் மிகநீண்ட அனுபவமுள்ள அதன் முன்னாள் ஆணையாளர் – இந்நாள்
வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஐயா.
உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் யாழ். மாநகர சபைக்கான வேட்பாளர்களிலேயே மேயர் வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே அரசியல் கட்சிகள் அறிவிப்பது வழமை.
கடந்த தேர்தலில் தமது மேயர் வேட்பாளர் ஆனல்ட் என்பதை சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்தது ஞாபகம்.
ஆனால், இந்த ஆண்டு அப்படி அறிவிப்பதில்லை என்று தமிழரசு கட்சி கடும் முடிவெடுத்துவிட்டது.
அது உட்கட்சி விவகாரம்.
ஆனால், யார் உங்களுடைய மேயர் வேட்பாளர் என்று தமிழரசின் எம்.பி. சுமந்திரனிடன் நேற்று முன்தினம் சாவகச்சேரியில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டபோது அவர் அளித்த பதில் வித்தியாதரனை மாத்திரமல்ல, முழு ஊடகவியலாளர்களுக்கும் அபகீர்த்திக்குரியது.
‘எங்களிடம் நாற்பத்தி ஐந்து வேட்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் நாற்பத்தி ஐந்து பேரும் மேயர் வேட்பாளர்கள்தான்.’ – இதுதான் சுமந்திரன் தெரிவித்த பதில்.
நாற்பத்தி ஐந்து பேரில் யார் மேயராகக்கூடியவர் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டிருந்தால் கூட யார் அவர் என்பதை ஊடகவியலாளர்கள் தீர்மானித்திருப்பார்கள்.
மாநகர சபைக்கான வேட்பாளர்களைத் தேடி அலைந்தபோது ஒரு வட்டாரத்தில் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்றும், இதனால் ‘ஒருவரை’ அழைத்து வந்து கையெழுத்துப் போட வைத்ததாகவும் இந்தப் பத்தியில் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
வேட்பாளராக கையெழுத்துப்போட்ட அவருக்கு, அப்போது எதற்காக கையெழுத்து வைக்கின்றேன் என்பதே தெரிந்திருக்கவில்லை என்றும் கையெழுத்து வைத்த பின்னர் கையில் கொடுத்ததை வாங்கிக்கொண்டு அவர் சென்றுவிட்டார் எனவும் பின்னர் தெரியவந்தது.
அந்த வேட்பாளரும் நாற்பத்தி ஐந்து மேயர் வேட்பாளர்களில் ஒருவர்தான்.
அவரும் வித்தியாதரனும் அவருக்கு ஒரே மாதிரியாம்.
ஒரு காலத்தில் இந்த வித்தியாதரன், தனது பத்திரிகையில் எழுதிவந்த கருத்துகளுடன் இந்த ஊர்க் குருவிக்கு துளிகூட உடன்பாடு இருக்கவில்லை.
மாவையை கட்சித் தலைமைப் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பியவர்களுடன் சேர்ந்து அவர் மாவை பற்றி எழுதிய கருத்துக்கள் அருவருக்கத்தக்கவை.
வித்தியின் அந்தக் கருத்துக்களை படிக்காததால்தான் மாவை இன்றும் உயிருடன் இருக்கிறார் என்று ஒருவர் அண்மையில் எழுதியிருந்தது ஞாபகம்.
அதேவேளை, சுமந்திரன் பற்றி அவர் எழுதிய பல விடயங்களை – அவரை புகழ்ந்து எழுதிய சில வசனங்களை வாசித்தபோது சுமந்திரனுக்கே கூச்சமாக இருந்திருக்கலாம்.
இன்று வித்தி அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் அல்ல.
ஆனாலும் அவர் உருவாக்கிவிட்ட பல நூறுக்கணக்கான அவரின் ஊடக குழந்தைகள்தான் இன்று ஊடகங்கள் எங்கும் வியாபித்து நிற்கின்றனர்.
அவருக்கு இழைக்கப்படும் அவமானங்கள் – அவர்களுக்குமான அவமானம்தான்.!
இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும்போது அவர் பற்றி அவரின் நண்பர் ஒருவர் தனது முகநூலில் எழுதிய குறிப்பு ஒன்றைப் பார்க்க முடிந்தது.
மேயர் வேட்பாளர் என்று தன்னை அறிவிக்காததால் வித்தி தேர்தலில் இருந்து ஒதுங்குகிறார் என்று சொன்னது அந்தத் தகவல்.
தேர்தலில் இருந்து அவர் ஒதுங்கினாலும், இனி அவர், தான் யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற வட்டாரத்தில் வேட்பாளர்.
அவர் பிரசாரம் செய்யவில்லை என்றாலும்கூட அவரின் மாணாக்கர்கள் ஏதோ ஒரு வகையில் பிரசாரம் செய்து அவரை வெல்லவைத்துவிடுவார்கள்!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles