அரசாங்கம் – சர்வதேச நாணய நிதியம் என்பவற்றுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்த பாராளுமன்ற விவாதத்தை தமிழ் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
புறக்கணிக்கலாம் என்று செய்தி ஒன்று வெளிவந்திருந்தது.
சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில், அரசாங்கம் மொழி உரிமையை மீறியுள்ளதாகத் தெரிவித்து,
இதைக் கண்டித்தும் அனைத்து மக்களின் மொழி உரிமையை பாதுகாக்கும் நோக்கிலும் எதிர்க்கட்சிகள் இந்த விவாதத்தை தவிர்க்கலாமெனக் கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி என்பன கோரின.
இதேபோன்று, சிங்கள மொழிபெயர்ப்பை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் கோரியிருந்தன.
ஆனால், அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான ஆவணத்தின் ஆங்கில வடிவமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டிருக்கும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதே.
ஆனால் அதனை பாராளுமன்றில் முன்வைக்கும்போது அதன் மொழிபெயர்ப்பையும் சேர்த்து தாக்கல்செய்திருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை சாதாரண மக்கள் அறிந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அரசு சூழ்ச்சிகரமாக இவ்வாறு செயல்படுகிறது என்றும் இதன்போது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
ஆனால் இதனை காரணம் காட்டி பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதத்தை புறக்கணிப்பது இதிலுள்ள கடுமையான நிபந்தனைகளை மட்டுமல்ல அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் மக்கள் அறிந்துகொள்ள முடியாமல் அல்லவா போய்விடும்.
பாராளுமன்றில் அது சிங்களமொழியில் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அது பாராளுமன்ற பதிவேட்டில் (கன்சாட்) வெளியாகியிருக்கும்.
அப்படி வெளியாகியிருந்தால் அது சாதாரண மக்களைச் சென்றடையப் போவதில்லை.
மாறாக அதுபற்றிய விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டு, அந்த ஒப்பந்தத்தில் உள்ள தீமைகளை சுட்டிக்காட்டி பேசினால் அது சாதாரண மக்கள்
மத்தியிலும் போய்ச் சேர்ந்து, அவர்களின் விவாதப் பொருளாகியிருக்கும்.
இப்படி ஒரு மொழிபெயர்ப்புக்காக முன்னரும் ஒருதடவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு (அப்போது தமிழரசும் அதில் இருந்தது) எதிர்ப்பு வெளியிட்டு, பாராளுமன்றத்தில் விவாதத்தையே நடக்க முடியாமல் செய்தது இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது.
மத்திய வங்கியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்தபோது, அதன் தமிழ் மொழிபெயர்ப்பை காரணம்காட்டி விவாதத்தையே நடத்தவிடாமல் தடுத்த கைங்கரியத்தை கூட்டமைப்பு செய்தது.
அது எதற்காக என்பதற்கு ஆய்வு தேவையில்லை.
அந்த ஊழல் குற்றச்சாட்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிரானது.
அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க கூட்டமைப்பு அப்போது மொழியுரிமையை பாவித்து அரசுக்கு உதவியது இரகசியமானதல்ல.
இப்போது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தின் பின்னர் நடைபெறும் வாக்கெடுப்பில் ரணில் அரசிற்கு ஆதரவு வழங்கவிருக்கும் எதிரணியினர் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பர் என்பது தெரிந்ததுதான்.
அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசுக்கான அழைப்பை விடுப்பார் என்றும் நம்பப்படுகின்றது.
அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகவே இப்போது மொழிப்பிரச்னையை காரணம்காட்டி எதிரணிக்கு உதவ முயல்கின்றனரோ என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை.!
ஊர்க்குருவி