நேற்றைய தினம் இந்தப் பத்தியில் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் கேள்வி ஒன்றின் நியாயம் குறித்து எழுதியிருந்தேன்.
அதனைப்படித்துவிட்டு கனடாவிலிருந்து ஊடக நண்பர் ஒருவர் சற்று கோபத்துடனேயே தொலைபேசி இணைப்பில் வந்தார்.
“ஈழநாடு, இப்படி கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல்படுவது அதன் பாரம்பரிய பண்புகளுக்கு இழுக்கு’’ என்று எடுத்த எடுப்பில் என்மீது பாய்ந்தார்.
ஈழநாடு எந்தக் கட்டத்திலுமே கிறிஸ்தவத்திற்கு எதிராக எதையும் எழுதியதில்லையே, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.
மறவன்புலவின் கருத்துக்களோடு உடன்பாடு இல்லை என்று திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டு, அவரது கருத்துக்களை சரி என்றும் எழுதிக்கொண்டிருக்கிறீரே என்றார் அவர்.
இந்த ஊர்க்குருவி சிறுவனாக இருந்த காலத்தில் – அரைக்காற் சட்டைக் காலத்தில், நாங்கள் சைக்கிள்களில் போய்க்கொண்டிருக்கும்போது எமது கிராமத்தில் கத்தோலிக்க பாதிரியார், எதிரே சைக்கிளில் வருவார். அப்போதெல்லாம் கத்தோலிக்க குருவானவர்கள் இன்றைய காலங்களைப் போல மோட்டார் சைக்கிள்களில் செல்வதில்லை.
எதிரே குருவானவர் வருவதை கண்டதும், அவர் அருகே வருகின்றபோது, நாங்கள் எமது சைக்கிளிலிருந்து இறங்கி நின்றுகொண்டு ‘குட்மோனிங் பாதர்’ என்போம். அவ்வளவு மரியாதையும் பக்தியும் அவர்மீது இருக்கும். ஆனால், சைவர்களான நாங்கள் அதே வீதியில் வருகின்ற எமது சைவக் குருவானவர்களை கண்டுகொள்வதில்லை.
இந்த நினைவுகள் இன்றும் இந்த ஊர்க்குருவிக்கு உண்டு. ஊர்க்குருவிக்கு மாத்திரமல்ல, ‘ஈழநாடு’ம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.
ஆனால், இன்று யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகள் எங்கும் புனிதர் யேசுவின் பெயரில் பல்வேறு புதிய புதிய குழுக்கள் முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.
மக்களை அவர்களின் பலவீனங்களை அறிந்து அவற்றை தீர்க்கிறோம், அதற்கு நாங்கள் உதவிபுரிகின்றோம் என்ற பெயரில் இன்று நடக்கும் மதமாற்ற முயற்சிகள் ஏற்புடையதல்ல.
ஒரு காலத்தில் திருநீறு அணிவதை கத்தோலிக்கர்கள் தவிர்த்ததுண்டு. இன்று தைப்பொங்கல் திருவிழாவை கத்தோலிக்க தேவாலயங்களில் கொண்டாடுகின்ற அளவிற்கு நிலைமைகள் மாறிவிட்டன. காரணம், தமிழர்களின் கலாச்சார – பண்பாட்டு விழுமியங்களை கத்தேலிக்கம் மத நிகழ்ச்சியாக இப்போது பார்ப்பதில்லை.
ஆனால், இந்த மதமாற்ற குழுக்கள், தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியங்களைக்கூட, தாலிகட்டுவது, பொட்டு வைப்பது சாத்தான்களின் வேலை என்பதுபோல பிரச்சாரம் செய்வதும், அதனை நம்மவர்கள் பின்பற்ற முனைவதும் மிகவும் ஆபத்தானவை.
ஓர் இனத்தின் பண்பாடும் கலாசாரமும் அழிந்துவிடுமானால், அது முகமற்ற சமுதாயமாக மாறிவிடும்.
அத்தகைய பிரச்சாரம் இன்று நமது அரசியல் தலைவர்களையே மாற்றியிருக்கின்றது என்றால், அவர்களே இன்று எமது தலைவர்களாக இருக்கிறார்கள் என்றால், அதனை அனுமதிக்கச் சொல்கிறீர்களா? என்று அந்த கனடா நண்பரிடம் கேட்டேன்.
அதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை!
அப்போது, கத்தோலிக்கரான அந்த ஊடக நண்பர், இந்தப் பிரச்னை உங்களுக்கு மட்டும் உரியதல்ல, அதாவது சைவர்களுக்கு மட்டும் உரியதல்ல, நாங்கள் றோமன் கத்தோலிக்கர்களும் இதுபோன்ற சபைகளால் பாதிக்கப்படுகின்றோம். யாழ்ப்பாணத்தில் நிலைமை இப்படியே போனால், கத்தோலிக்க தேவாலயங்களில் வழிபடுவதற்கே ஆட்கள் இருக்கப்போவதில்லை என்று சலித்துக்கொண்டார்.
– ஊர்க்குருவி