மகன் ஒருவன் தன் தந்தையின் விருப்பத்துக்கு மாறாகவே எப்போதும் செயல்பட்டு வந்தான்.
இதனை உணர்ந்த அவனின் தந்தை மரணப்படுக்கையில் இருக்கும்போது, தன் விருப்பத்துக்கு மாறாகத்தான் மகன் செயல்படுவான் என்று எண்ணி மகனிடம், ‘மகனே, நான் இறந்ததும் ஏதாவது ஓர் நீர் நிலையில் என் உடலை அடக்கம் (புதைத்து) செய்துவிடு’ என்று வேண்டிக் கொண்டான்.
தன்னைத் தரையில்தான் தன் மகன் புதைப்பான் என்று மனத்தில் நினைத்துக் கொண்டார்.
ஆனால், அந்த உதவாக்கரை மகனோ, வாழும்போதுதான் நான் என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தவறிவிட்டேன், அவர் இறந்த பிறகாவது நான் அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி அவர் இறந்ததும் தங்கள் சொந்த மண்ணில் ஒரு சிறிய குளத்தை உருவாக்கி அதனுள் தன் தந்தையின் பிணத்தைப் போட்டுவிட்டான்.
தமிழ் பொதுவேட்பாளர் விடயம் மீண்டும் பரபரப்பாகியிருக்கின்றது.
அதனால்தானோ என்னவோ அதனை எதிர்ப்பவர்களும் வரிந்துகட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கின்றனர்.
‘பொது வேட்பாளர் என்ற கதையாடல் சில நாட்களில் காணாமல் போய்விடும்’ என்றும் சிலர் நம்பிக் கொண்டிருக்கையில்தான், தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ கட்சி அந்த விடயத்தில் தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றது.
இனி அதேவழியில் புளொட்டும் முடிவெடுக்கும் என்று நம்பப்படுகின்றது.
இன்று அதன் மத்திய குழு கூடி முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுவும் நடந்து விட்டால், அடுத்தது தமிழ் அரசு கட்சி.
தமிழ் அரசு கட்சி அவசரப்பட வேண்டியதில்லை என்றுதான் முடிவெடுத்திருக்கின்றதே தவிர, முற்றாக அதிலிருந்து வெளியேறிவிடவில்லை.
அது வெளியேறவேண்டும் என்று விரும்புகின்ற சக்திகள் தமது பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றன.
அவர்களின் முடிவு இனியும் தாமதமானால் பொது வேட்பாளர் விடயத்தை இப்போது முன்னெடுத்துவரும் சிவில் சமூக கூட்டிணைவு அரசியல் கட்சிகளுடன் அதாவது, ஏற்கனவே ஆதரவை வெளிப்படுத்திய கட்சிகளுடன் இணைந்து பொதுக் கட்டமைப்பை அமைக்கின்ற பணியை தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமது பகிஷ்கரிப்பு முடிவுக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கிவிட்டதால் அது இனி இந்த விடயத்தில் இணைவதற்கு சாத்தியம் இருக்கப்போவதில்லை.
கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் வெறும் பகிஷ்கரிப்பு என்ற முடிவை எடுத்து விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விட்டு ஒதுங்கிக்கொள்கின்ற முன்னணி இப்போது தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியிருக்கின்றது.
அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.
முன்னைய காலங்களில் தெற்கின் வேட்பாளருக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த முன்னணிக்கு இந்தத் தடவை ஏன் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் பிரசாரம் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.
அதனை தொடங்கி விட்டதும் தெரிகின்றது.
ஆனால், பொதுவேட்பாளர் எந்தக் கோரிக்கையை மக்களின் முன்வைத்துவிட்டு களம் இறங்கப் போகின்றாரோ – அதற்கு, எதற்காக தமிழ் மக்கள்
ஆணையை வழங்க வேண்டும்? என்றும் முன்னணி கேட்க வேண்டியிருக்கும்.
சிலவேளை மக்கள் அதற்கு ஆதரவு வழங்காவிட்டால் முன்னணியின் கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்றும் நாம் அர்த்தப்படுத்தலாம்.
அதாவது, நமது இறைமை – சமஷ்டி கட்டமைப்பு – வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோரிக்கைகளுடன் பொதுவேட்பாளர் களம் இறங்கினால் அது எதற்கு என்று முன்னணி கேட்குமோ தெரியவில்லை.
தற்போது பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவுக்கு வடக்கு, கிழக்கில் இயங்கும் பொது அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் பெரும்பாலும் அனைத்துமே ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.
அரசியல் கட்சிகளிலும் மேலே தெரிவித்துள்ளதுபோல ஒரு கட்சி முடிவெடுக்கவில்லை.
மற்றையது பகிஷ்கரிக்கின்றது.
இனி அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளின் கூட்டணியும் சேர்ந்து பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, தமிழ் பொதுவேட்பாளர் களம் இறங்குகின்ற விடயத்தில் ஏனைய விடயங்களை இறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வேட்பாளரை தெரிவு செய்வது, எந்த கட்சியில் போட்டியிடுவது, அதிலும் முக்கியமாக என்ன கோரிக்கையை முன்வைப்பது என்பது போன்ற விடயங்கள் இறுதி செய்யப்பட்டதும் பிரசாரம் சூடுபிடிக்கலாம்.
என்ன, இந்தக் காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கின்ற போதும் அவை ஒவ்வொன்றும் பற்றியும் நமது ஆய்வாளர்கள் தமது கருத்துகளை முன்வைப்பார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.
மேலேயுள்ள கதையில் தந்தை என்ன சொன்னாலும் அதற்கு எதிராகவே மகன் செய்வது போலத்தான் – சிலர் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே அதனை
எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுபற்றிய எந்த கரிசனையும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.
ஊர்க்குருவி.