ஆய்வாளர் நிலாந்தன் மேடைகளில் பேசுகின்றபோது அடிக்கடி சொல்லுவார், ‘தமிழ் மக்கள் அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டைபோல சிதறுண்டு கிடக்கிறார்கள்’ என்று. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி அவற்றை சிதறாமல் பார்க்க எடுத்த முயற்சி ஓரளவுக்கு வெற்றியளித்த போதிலும், அது தொடர்ச்சியாக பேணப்படாததால் மீண்டும் சிதறிக்கொண்டிருக்கின்றது. அதிலும், முன்னரைப்போல அல்லாமல் இன்னும் இன்னும் மோசமாக சிதறிக்கொண்டிருக்கின்றது.
ஒப்பீட்டடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சி என்று சொல்லத் தகுதி உள்ள கட்சியாக- இருந்தது தமிழ் அரசு கட்சிதான். ஒரு கட்சியை தேசியக் கட்சி என்கின்றோம் என்றால் அது தமது தேசம் முழுக்க கிளைகள் பரப்பி விருட்சமாக இருக்கவேண்டும். ஆனால், நமது தமிழ்த் தேசியக் கட்சிகள் என்பவை வெறுமனே தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளாக மட்டுமே இருக்கின்றனவே தவிர, தமிழர் தேசம் எங்கும் கிளை பரப்பி வலுவான கட்டமைப்புடன் இல்லை. ஒப்பீட்டடிப்படையில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஒன்று தான் தமிழர் தேசமெங்கும் கட்டமைப்பைக் கொண்டகட்சி.
ஆனால், அதன் இன்றைய நிலை கட்சியில் எவர், எங்கே இருக்கின்றார்?, எந்த அணியில் இருக்கிறார்?, இப்போதும் அந்தக் கட்சியில்தான் இருக்கின்றாரா? என்று கேட்க வேண்டியிருக்கின்றது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நடந்த தமிழ் அரசு கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை படித்தபோது, கட்சி நிச்சயம் இரண்டாக உடையப்போகின்றது என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அதற்காகக் கட்சி ஏற்கனவே இரண்டாக அல்லாமல் ஒன்றாகவா இருந்தது என்று நீங்கள் கேட்கலாம். அதுவல்ல, ஒரு கட்சிக்குள்ளேயே இரண்டு அணிகளாக அல்லாமல் தனித்தனிக் கட்சிகளாக – ஒவ்வொருவரும் தாங்கள்தான் தமிழ் அரசு என்று சொல்லிக்கொண்டு இரண்டு கட்சிகளாகத் தேர்தலை எதிர்கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படி நடந்துவிட்டால், சிறீதரன் தனித்து போட்டியிட்டால் அவர் மூலம் கட்சிக்குக் கிடைக்கின்ற வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்ற எண்ணத்தில் தமது மத்திய குழுவின் முடிவையே வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டார்கள். அவ்வாறு மாற்றியதால் சமாதானம் அடைந்த சிறீதரனும் தமிழ் அரசில் போட்டியிட முடிவெடுத்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரம் வாக்குகளை அப்போதைய தமிழ் தேசியக் கூட்ட மைப்பு பெற்றபோது சிறீதரன் பெற்ற விருப்பு வாக்குகள், முப்பத்தி ஐயாயிரம் மட்டுமே. அப்படியெனில், அவருக்காகக் கட்சிக்கு வாக்களித்தவர்கள்- அல்லது கட்சிக்கு வாக்களித்தவர்களில் அவரின் ஆதரவாளர்கள் அதுதான்.
தனது ‘ஆளுமை’யை இப்போது வெளிப்படுத்திவிட்டு- துகில் உரிந்து நிற்கும் அவரால் இப்போதும் அதேயளவு வாக்குகளை பெறமுடியுமா என்பது தெரியவில்லை. தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அவரோடு சேர்ந்து நின்றவர்கள் – அவர் தலைவர் பதவிக்காக போட்டியிட்டபோது அவரை ஆதரித்து நின்றவர்களை எல்லாம் தனியாக விட்டுவிட்டு அவர் கட்சியின் வேட்பாளராக போய்விட்ட பின்னர் கவனிப்பாரற்று நின்ற கட்சிக்காரர்கள் எல்லோரும் இப்போது வரிசைகட்டி இணைந்து வருகின்றனர். இதனால் தமிழ் அரசு ‘பி’ அணி ஒன்று தேர்தலில் களம் இறங்கத் தயாராகி வருகின்றது. இன்று அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என்பதால் – நாளை வெளிவரலாம்.
அப்படியோர் அணி தேர்தலில் களம் இறங்குமென்றால் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளை சகித்துக்கொள்ளாமல் கோபத்தில் இருக்கும் கட்சிக்காரர்கள் தமது கோபத்தை வெளிப்படுத்த அந்த ‘பாதிக்கப்பட்டவர்கள்’ அணியை ஆதரிக்கலாம். அந்த அணியோடு சிறீதரன் சேர்ந்திருந்தால் தேர்தல் முடிவு சிலவேளை ‘பி’ அணிதான் உண்மையான தமிழ் அரசு என்பதையும் வெளிக்காட்டியிருக்கலாம். அதுவல்ல இன்று நமது கவனத்தை ஈர்த்தது: கடந்தமுறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முடிவுகள் வெளியானபோது, சர்ச்சைக்கு உரியவராக இருந்த சசிகலா ரவி ராஜ் இந்தத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். முன்னதாக அவருக்கு நியமனம் வழங்கவேண்டும் என்று தேர்தல் வேட்பாளர் தெரிவுக்குழுவிடம் அதன் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசா விண்ணப்பித்திருந்தார் எனவும் அவருக்கு நியமனம் வழங்க வேட்பாளர் தெரிவுக்குழு மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அவருக்கு நியமனம் கொடுக்க மறுத்துவிட்டுத்தான், தமிழ் அரசு தெரிவுக்குழு பெண் வேட்பாளர்கள் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை என்றும் உடனே விண்ணப்பிக்கலாம் எனவும் பகிரங்க அறிக்கையை வெளியிட்டு மறுநாள் இரு பெண்களை வேட்பாளராக்கியது. அவ்வாறு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக இப்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கடந்த தேர்தலில் மயிரிழையில் தோல்வியடைந்த ஒருவரைத் தவிர்த்து புதியவர்களை சேர்த்துக் கொண்டது எதற்காக என்பது எல்லோராலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். வேட்பாளர் நியமனம் கொடுக்கின்ற அளவுக்கு கட்சியில் முக்கியமானவராக இல்லாமல் இருந்த சசிகலாவிடம் இப்போது அவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்று கட்சி பதில் செயலாளர் அறிவித்திருக்கிறார். தமிழ் அரசுதான் இவ்வாறு நடந்துகொள்கின்றது என்றால், அவரும் ‘அங்கே’ இல்லை யென்றால் ‘இங்கே’ என்று போட்டியிடுவதன் மூலம் தன்னையும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார் ஒரு தமிழ் அரசுக்காரர்.! –
-ஊர்க்குருவி.