தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவின்போது இந்தப் பத்தி- போட்டியிட்ட இருவரில் ஒருவருக்கு ஆதரவாக எழுதிவந்தது. அதற்கு காரணம் அவர் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் என்பதற்காக அல்ல. எழுபதுகளில் தமிழ் அரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் இணைந்துகொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்த பின்னர் தமிழ் அரசுக் கட்சி கிடப்பில் போடப்பட்டது. எழுபத்தி ஏழு தேர்தலில் கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலத்திற்கு (கஜேந்திரகுமார் பொன்னம் பலத்தில் தந்தையார்) வட்டுக் கோட்டைத் தொகுதியை ஒதுக்கிக்கொடுக்க, அவரோ தனக்கு தனது தந்தை எப்போதும் போட்டியிட்ட யாழ்ப்பாணத் தொகுதிதான் வேண்டும் என்று அடம்பிடித்தார்.
அவரது கோரிக்கையை அப்போதைய கூட்டணியின் அதிகாரம் மிக்க தலைவராக இருந்த அமிர்தலிங்கம் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரோ தனது இளவல் என்று கருதிய யோகேஸ்வரனுக்கு கொடுப்பதற்காக யாழ்ப்பாணத்தை குமாருக்கு கொடுக்க மறுத்ததும், அவர் கூட்டணியிலிருந்து வெளியேறி தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டு தோல்விகண்டதும் பழைய சங்கதிகள்தான். அதாவது எழுபத்தியேழு தேர்தலில் காங்கிரஸ் – தமிழ் அரசு சேர்ந்து உருவாக்கிய கூட்டணியில் உண்மையில் கட்சியாக தமிழ் அரசு மாத்திரமே இருந்தது.
ஆனாலும் தமிழ் அரசு அப்போது உறங்க வைக்கப்பட்டது. இரண்டாயிரத்து நான்கு தேர்தலில் தமிழ் அரசு தூசிதட்டி எடுக்கப்படும் வரை அதற்கு யார் தலைவராக இருந்தார் என்பதே யாருக்கும் தெரியுமோ தெரியவில்லை. ஆவரங்கால் சின்னத்துரை தலைவராக இருந்ததாக ஞாபகம். இரண்டாயிரத்து நான்கு தேர்தலில் தமிழ் அரசு பயன்படுத்தப்பட்டபோதிலும் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சியாக இருந்ததே தவிர, வேறு எதற்கும் பயன்படுத்தப்படவில்லை என்பதால் பின்னர் சம்பந்தன் அதன் தலைவராக இருந்தாலும் யுத்தம் முடியும்வரை யார் அதனை வழிநடத்தினார்கள் என்பது இரகசியமானதல்ல. யுத்தத்திற்கு பின்னரும் கூட தமிழ் அரசின் தலைவராக இருந்த சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக அறியப்பட்டாரே தவிர, தமிழ் அரசின் தலைவர் என்பது பெயரளவிலேயே இருந்தது. பின்னர் அதன் தலைவராக ஒரு தசாப்தமாக இருப்பவர் மாவை சேனாதிராசா.
அவரது தலைமைத்துவ திறமை உலகறிந்தது. அத்தகைய ஒரு பதவிக்கான தேர்தலில் சிறிதரனும் சுமந்திரனும் ‘அடிபட்டபோது’ யார் அதற்கு தகுதியானவர் என்ற கேள்வியே எழவில்லை. ஏனெனில் மாவை தலைவராக இருக்கலாம் என்றால், ஏன் யாரால் கூட முடியாது என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுந்திருக்கலாம். சிறிதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது, அவரிட மிருந்த ஒரேயொரு ‘தகுதி’ அதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இரண்டு வேட்பாளர்களிடையே செய்துகொள்ளப்பட்ட எழுதாத உடன்படிக்கை தான்.
சுமந்திரன் தனக்கு ஏற்கனவே ஒப்புதல் தந்தார் என்று சிறிதரன் பொதுவெளியில் கூறியதை சுமந்திரன் இன்றுவரை மறுதலிக்கவில்லை. இரண்டாயிரத்து இருபது பாராளுமன்ற தேர்தலில் சிறிதரனின் உதவியை – அதாவது விருப்பு வாக்கு விடயத்தில் நாடிப்பெற்ற சுமந்திரன், அதற்காக சிறிதரனை தலைவராக ஆக்குவதாக ஒப்புதல் அளித்ததாகவே கருதமுடிந்தது. சிறிதரனுக்கு கட்சித் தலைவர் பதவி மீது ஆர்வம் ஏற்பட்டதே இதனால்தான் என்றும் கருத இடமுண்டு.
அவர் தான் ஏமாற்றப்பட்டதாக பொதுவெளியில் கூறியதும், இந்த பத்தி அவரை ஆதரிக்க காரணமானது. அதுவல்ல நாம் இன்று சொல்ல வருவது: சிறிதரன் தலைவராக தெரிவான நாளிலிருந்து இன்று வரையான அவரது நடவடிக்கைள் பற்றியே அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை ‘கிழித்து தொங்கவிட்டு’ வருகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை நியாயமான தாக்குதல்கள் தான்.
தலைவராக தெரிவான நாட்களிலிருந்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அவரது ஆளுமையை வெளிப்படுத்தி வருகின்றன என்றே பலரும் எழுதிவருகின்றனர். கடைசியாக பொதுவேட்பாளரை ஆதரிக்கின்ற விடயத்திலும் அவர் நேர்மையாக நடந்துகொண்டாரா என்ற கேள்வி அதில் முக்கியமானது. பொதுவெளியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய அவர் அதனை இதயசுத்தியுடன் செய்தாரா என்பது இன்றும் கேள்விக்குரியது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு ஆதரித்த வேட்பாளருக்கே கிளிநொச்சியில் அதிக வாக்குகள் கிடைத்தன என்றும், எனவே சிறிதரனை கிளிநொச்சி மக்கள் நிராகரித்து விட்டனர் என்றும் சிலர் எழுதி வருகின்றனர்.
ஆனால் கிளிநொச்சியில் சிறிதரனின் தேர்தல் பிரசாரயுக்தியே வித்தியாசனமானது. இருபது தேர்தலில் சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் என்று பொதுவெளியில் கிலாகித்து கூறியபோதிலும் அவருக்கு கிளிநொச்சி மக்கள் தமது விருப்பு வாக்கை வழங்கி விடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தார். சுமந்திரனுக்கு கிளிநொச்சியில் கிடைத்த விருப்பு வாக்குகள் அதனை புலப்படுத்தின. எனவே அவர் கிளிநொச்சி மக்களை சங்குக்கு வாக்களிக்க பழக்கப்படுத்தக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தாரா என்பது தெரியவில்லை. என்னதான் இருந்தாலும், இன்று சமூகவலைத்தளங்களில் சிறிதரனை கிழித்து தொங்கப்போடுபவர்கள் யார் என்று பாhத்தால், முன்னர் சுமந்திரனுக்காக எழுதிக்கொண்டிருந்தவர்கள்தான். ஆனாலும் அவர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து சிறிதரனும் அமைதியாக இருப்பது அவர் அவற்றை ஏற்றுக்கொள்வதாகவே தெரிகின்றது.!
ஊர்க்குருவி.