பல தடவைகள் இந்தக் கதையை ஞாபகப்படுத்தியிருக்கிறேன். இருந்தாலும் இன்றும் அதனை எழுதவேண்டியிருக்கின்றது. என்னிடம் நண்பன் ஒருவர் வந்து பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டார். அவர் வந்து கேட்ட போது என்னிடம் இருக்கவில்லை. ‘மச்சான், இப்ப இல்லையடாப்பா, அடுத்த மாதம் முடிந்தால் பார்ப்பம்..’ என்றேன். அவனும் போய்விட்டான். அடுத்த மாதம் மறக்காமல் மீண்டும் வந்தான். அப்போதும் என்னிடம் இருக்கவில்லை. போன மாதம் கூறிய அதே பதிலையே இப்போதும் கூறினேன்.
அவன் போய்விட்டான். அடுத்த மாதமும் வந்தான். நானும் இதே பதிலையே கூறினேன். அவனும் எந்தவித கவலையும் – ஏன் கோபம்கூட இல்லாமல் திரும்பிவிட்டான். இப்படியே மாதங்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. அவனும் மாதம் தவறாமல் வந்துகொண்டே இருந்தான். கடைசியாக அவனிடம் நான் கேட்டேன், ‘என்னிடம் கேட்பதுபோல வேறு யாரிடமும் கேட்கவில்லையா?’. அவன் சொன்னான்: ‘நீ தருவாய்தானே என்ற நம்பிக்கையில் நான் வேறு யாரிடமும் கேட்கவில்லை…’. அப்போது எனக்கு ஒரு விடயம் மாத்திரம் தெளிவாகப்புரிந்தது. அவனுக்கு இந்த பத்தாயிரம்ரூபாய் உண்மையில் தேவையில்லை. என்னிடம் கிடைத்தால் வாங்குவோம் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றான்.
எனக்கு அப்போது புரிந்தது போலத்தான் நமது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் ஒரு விடயம் எப்போதோ புரிந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால்தான் அறுபது வருசமாக தாங்கள் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று சொல்லிக்கொண்டிருக்க, தமிழ் மக்களும் அதை நம்பிக்கொண்டு தங்களுக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள் என்றால், தமிழ் மக்களுக்கும் தீர்வு அவசியமாக தேவைப்படவில்லை. அவர்கள் (தாங்கள்) பெற்றுத் தந்தால் பார்ப்போம் என்று அமைதியாக இருக்கிறார்கள் என்று நமது அரசில்வாதிகளும் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கதையைத்தான் தீர்வு பற்றி யார் பேசினாலும் சொல்வதுண்டு. நேற்றைய தினம் இரண்டு முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க முடிந்தது. இருவருமே தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் முக்கியமான தலைவர்கள். தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள். இருவருமே மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப் பட்டனர். தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக பணியாற்றுவதால் சோர்வடைந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் சம்பிரதாயத்திற்காக ‘தேர்தல் எப்படி இருக்கின்றது? என்ன சோர்வாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
இருவரையும் ஒரே நேரத்தில் சந்திக்கவில்லை. வௌ;வேறு நேரத்தில்தான் சந்தித்திருந்தேன். ஆனால், இருவருமே ஒரே விடயத்தையே கதைத்துப் பேசி சொல்வதுபோல பதில் சொன்னார்கள். ‘மக்கள் இந்தத் தடவை தேர்தலில் பெரிதாக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இந்தத் தடவை வாக்களிப்பு வீதம் மிகவும் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’. இதுதான் அவர்கள் இருவரிடமும் இருந்து வந்த பதில். ‘ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
மக்கள் அரசியல்வாதிகள்மீது, குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றார்கள்’ என்று கூறிய ஒரு தலைவர், ‘ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுவிட்டு, இப்போது அவர்களே தனித்தனித் துண்டுகளாக பிரிந்ததோடு மாத்திரமல்ல கட்சிகளுக்குள்ளும் பல பிரிவுகளாக பிரிந்து நிற்பதால் மக்கள் இப்போது தெளிவடைந்து விட்டார்கள்….’, என்றார். இவையெல்லாம் நமக்கும் அண்மைய நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த விடயம்தான்.
ஆனால், நான் சந்தித்த மற்றைய தலைவர் சொன்ன தகவல்தான், ஆச்சரியமாக இருந்தது. அதனை நாமும் கவனிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. ‘இப்போது கவனித்தீர்களா… நமது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் எல்லோரும் தமது துண்டுப்பிரசுரங்களில் அரசியல் தீர்வு பற்றி மட்டுமல்ல, அபிவிருத்தி பற்றியும் பேசுகிறார்கள்.’ தங்களால் பெற்றுக் கொடுக்க முடியாத அரசில் தீர்வு பற்றியே இனியும் பேசிக்கொண்டிருந்தால் மக்கள் ஆகக்குறைந்தது தமது அன்றாட தேவைகள் – வசதிகளுக்காக தேசியக் கட்சிகளின் பின்னால் போய்விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது. இது மிகவும் ஆபத்தானது என்பதை தமிழ்த் தேசியக் கட்சிகள் என்போர் புரிந்து கொள்ளவேண்டும். அபிவிருத்திக்காக உங்களுக்கு வாக்களிப்பதெனில் – எதற்காக உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால், சாமியிடம் நேரடியாக வரம் கேட்க முடியுமெனில் இடையில் நிற்கும் பூசாரி எதற்கு என்று மக்கள் யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். இது இனத்தை முற்றாகவே இல்லாமல் செய்துவிடும்.!
- ஊர்க்குருவி.