ஏற்கனவே இந்தப் பத்தியில் எழுதிய விடயம்தான். ஆனாலும் அந்த விடயம் இப்போது பொலிஸ் முறைப்பாடு வரை வந்திருப்பதால் அதனை மீண்டும் எழுதவேண்டியிருக்கின்றது. வன்னி மாவட்ட முன்னாள் எம். பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் மதுபானசாலைக்கு அனுமதி எடுத்துக் கொடுப்பதற்காக ஒருவருக்கு சிபாரிசு செய்தாரென அவரின் கட்சியின் மற்றுமொரு முன்னாள் எம். பியான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்தை நிராகரித்துள்ள சார்ள்ஸ், அது குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருக்கின்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் நண்பர் ஒருவர் தெரிவித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகின்றது. யாழ்ப்பாணத்தில், பெற்றோல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விரும்பிய வர்த்தகர் ஒருவர், அதற்காக முயற்சி செய்தபோது, அந்தத் துறை சார்ந்த அமைச்சருக்கு வடக்கு எம். பி. ஒருவர் நெருக்கமான நண்பர் என்பது தெரிய வந்திருக்கின்றது. அந்த வர்த்தகரும் குறிப்பிட்ட அந்த எம். பியை அணுகி, அந்த அமைச்சருக்கு தன்னை சிபாரிசு செய்யுமாறு கேட்டிருக்கிறார். இவரும் தான் சொன்னால் அவர் உங்களுக்கு பெற்றோல் நிலையத்தை புதிதாகத் திறப்பதற்கு அனுமதி தருவார் என்றால் அவருக்கு உங்களை அறிமுகம் செய்து வைப்பதில் தனக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறியதுடன், அவர் முன்னிலையிலேயே அந்த அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, ‘எனது நண்பர் ஒருவர் பெற்றோல் நிலையம் ஒன்றைத் திறக்க விரும்புகின்றார், என்ன ‘போர்மாலிற்றிஸ்’ இருக்கிறதோ அதை அவர் செய்து தருவார்.
முடிந்தால் அவருக்கு உதவுங்கள்’ என்றிருக்கிறார். அமைச்சரும் அந்த வர்த்தகருக்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்க இவர் கொழும்பு சென்று அமைச்சரைச் சந்தித்திருக்கிறார். பெற்றோல் நிலையம் ஒன்றை அமைப்பதெனில், அதற்காக பல கட்ட ஏற்பாடுகளை பூர்த்தி செய்யவேண்டியிருக்கும். அதற்கான இடம் பொருத்தமானதா என்பதை முதலில் பரிசோதித்து, பின்னர் அற்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த பின்னர், அனுமதி கிடைக்கும் இறுதி சந்தர்ப்பத்தில் – அமைச்சருக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து அனுமதியை பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அவர், இவர் கொடுத்த பணத்தில் சில இலட்சங்களை திரும்பிக் கொடுத்திருக்கிறார். இவ்வாறு அனுமதி பெறுவதற்காக ஒருவரை அறிமுகம் செய்கின்றவருக்கு வழக்கமாக சில இலட்சங்களை கொடுப்பதுண்டு. ஆனால், உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அப்படி எதனையும் வாங்கப் போவதில்லை என்பதால் அதனை உங்களுக்கே தருகிறேன் என்றிருக்கிறார். அதாவது, அந்த வர்த்தகருக்கு அமைச்சரை அறிமுகம் செய்துவைத்த நமது அந்த எம். பி. அப்படியொரு நேர்மையானவர் என்பதைக்கூட இந்த வர்த்தகர் பின்னர் தான் தெரிந்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்தை அந்த வர்த்தகரே எனது நண்பர் ஒருவருக்கு கூறினார் என்று, நண்பர் ஒருவர் ஒருதடவை கூறியதுதான் இப்போது ஞாபகத்துக்கு வந்தது.
ஒருவர் பெற்றோல் நிலையம் திறக்கவேண்டும் என்று நினைப்பதும் இன்னுமொருவர் மதுபான விற்பனை நிலையம் ஒன்றை திறக்கவேண்டும் என்று நினைப்பதும் இரண்டு வகையான வர்த்தகம் தான். கிளிநொச்சியில், கசிப்பு உற்பத்தி அதிகரிப்பதற்குக் காரணம், அங்கே மதுபான விற்பனை நிலையங்கள் எதுவும் இல்லாததுதான் என்றும் எனவே, அங்கே மதுபான விற்பனை நிலையங்களை திறக்க வேண்டும் எனவும் அந்த மாவட்ட எம். பி. ஒருவர் யுத்தம் முடிந்து சில வருடங்களின் பின்னர் பகிரங்கமாகவே அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆக, ஒரு வர்த்தகர் மதுபான சாலையை திறந்து வியாபாரம் செய்ய விரும்பினால், அதற்கு சிபாரிசு செய்வதில் என்ன தவறிருக்கின்றது என்பது தெரிய வில்லை. அவர் சட்டத்துக்கு மாறாக – மதுபானசாலையை திறப்பதற்குரிய நியமங்களுக்கு மாறாக – உதாரணமாக பாடசாலைகள், ஆலயங்களுக்கு அருகே இல்லாமல் அமைப்பது தவறான ஒன்றல்லவே. எதற்காக இவர்கள் குய்யோமுறையோ என்று கூக்குரலிடுகிறார்கள் என்பது தெரியவில்லை. அவ்வாறு அனுமதியை பெற்றுக்கொடுப்பதற்கு அவர் கையூட்டு வாங்கியிருந்தாலோ அல்லது நியமங்களுக்கு மாறாக அதனை திறக்க அனுமதிக்குமாறு தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியிருந்தாலோ அது தவறானதுதான். அதற்காக அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று எதற்காக வாதிடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
சார்ள்ஸ நிர்மலநாதனும் தான் சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்று தான் மறுத்திருக்கிறாரே தவிர சிபாரிசு செய்யவில்லை என்று மறுத்தாராவென தெரியவில்லை. இத்தனைக்கும் இன்னுமொருவர், சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, அதற்காகவே சிலருடன் கைகோத்துக்கொண்டு அரசியல் செய்கிறார் எனவும் பேசப்படுகின்றது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர்களின் சிபாரிசுக் கடிதத்தை வெளியிடப்போவதாக சிலர் அச்சுறுத்தி வருகின்றனர் எனவும் பேசப்படுகின்றது.