மட்டக்களப்பு காத்தான்குடி முகைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு இன்று விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி முகைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
பாடசாலை மாணவர்கள் இலங்கை மற்றும் இந்தி தேசியக் கொடிகளை அசைத்து வரவேற்றனர். காத்தான்குடி முகைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா, காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன் உட்பட காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி முகைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாக்கு காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி முகைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

மேலும் காத்தான்குடி 5 பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயிலுக்குச் சென்ற இந்திய உயர்ஸ்தானிகரை அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை வலியுல்லாஹ் பொறுப்பு நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி வரவேற்றார். தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு இந்திய உதவி திட்டத்தின் கீழ் உலருணவுப் பொருட்களையும் இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கி வைத்தார்.