இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானம் செலுத்தவேண்டும்!

0
168

சர்வதேச ரீதியில் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவேண்டியது அவசியம் என்பதுடன் நீண்டகாலமாகப் பதிலின்றிப் போராடிவரும் காணாமல்போனோரின் குடும்பங்களின் கோரிக்கைக்கு உடனடியானதும் நியாயமானதுமான தீர்வை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து முன்னெடுத்துவரும் கவனயீர்ப்புப்போராட்டம் இன்றுடன் 2000 நாட்களை எட்டியுள்ளது.
அதனை முன்னிட்டு நேற்று தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்கள் வட, கிழக்கு மாகாணங்களில் உண்மை மற்றும் நீதியைக்கோரி ஆரம்பித்த இடைவிடாப்போராட்டம் 2000 நாட்களை எட்டியிருக்கின்றது.
உண்மையைக் கண்டறிவதை முன்னிறுத்தி அக்குடும்பங்கள் விசாரணை ஆணைக்குழுக்கள் தொடக்கம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வரையிலான உள்ளகப்பொறிமுறைகளுடன் இணைந்து செயற்பட்ட போதிலும், இன்னமும் அவர்களுக்கு உரிய பதில் கிட்டவில்லை.
காணாமல்போனோரின் குடும்பங்களால் பலவருடகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு அரச அதிகாரிகளால் இடையூறு விளைவிக்கப்பட்டு வந்திருப்பதுடன் அவர்களுக்குரிய அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் மற்றும் பாதுகாப்புப்பெறுவதற்கான உரிமை என்பவற்றுக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஒடுக்குமுறைகள், அத்துமீறல்கள், தொடர்ச்சியான கண்காணிப்புக்கள் உள்ளடங்கலாகப் போராட்டங்களின்மீதான அடக்குமுறைகள் மற்றும் அமைதிப்போராட்டங்கள்மீதான கட்டுப்பாடுகள் என்பன காணாமல்போனோரின் குடும்பங்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் சவால்களாகக் காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச ரீதியில் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவேண்டியது அவசியம் என்பதுடன் நீண்டகாலமாகப் பதிலின்றிப் போராடிவரும் காணாமல்போனோரின் குடும்பங்களின் கோரிக்கைக்கு உடனடியானதும் நியாயமானதுமான தீர்வை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அக்குடும்பங்களின் அன்பிற்குரியவர்கள் தொடர்பான வழக்குகளை முடிவிற்குக்கொண்டுவருவதை முன்னிறுத்தி அவர்கள்மீது அநாவசியமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு மதிப்பளிப்பதற்கும் அவர்களுக்குரிய உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிசெய்வதற்குமே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும்.
அதேவேளை சர்வதேச சட்டங்களின் பிரகாரம் காணாமல்போனோரின் குடும்பங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படுவதிலிருந்து விடுபடல் உள்ளடங்கலாகப் பாதுகாப்புப்பெறுவதற்குமான அவர்களது உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கு ஏற்றவாறான சூழலை உருவாக்குவதற்கான கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது.
அதுமாத்திரமன்றி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தாக்கம் உள்ளடங்கலாக மிகமோசமடைந்துவரும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில், சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானம் செலுத்தவேண்டியது அவசியம் என்பதுடன், போதுமான ஆதாரங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் கவனம்செலுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.