இலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிமான ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றுள்ளது.
ஆண்டிகுவாவில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் அசேன் பண்டாரா ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பெபியன் அலென், கெவீன் சின்கிளாயர், ஹோல்டர் மற்றும் ஒபேட் மெக்கோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லெண்ட்ல் சிமோன்ஸ் 26 ஓட்டங்களையும் பெபியன் அலென் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லக்ஷான் சந்தகென் 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக போட்டியின் வெற்றிக்கு வித்திட்ட பெபியன் அலென் தெரிவுசெய்யப்பட்டார்.