இலங்கை கிரிக்கெட்டை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும்: விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை

0
115

இலங்கை கிரிக்கெட்டை ஊழல்வாதிகளிடமிருந்து பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார்.

சபையில் பல்வேறு தகவல்களை சுட்டிக்காட்டி அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“நாட்டின் ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. யாரோ ஜனாதிபதியை அழிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். ஊழல்வாதிகளுக்கு ஜனாதிபதியை நெருங்குவதற்கு இடமளிக்க வேண்டாம் என நான் கோருகிறேன்.
ஜனாதிபதியிடம் என்ன அனுமதி கோரவேண்டும் அமைச்சரவையிடம் என்ன அனுமதி கோர வேண்டும் என்பதை நான் அறிவேன்.
எனது அமைச்சில் வேறு நபர்கள் தலையிடுவதை நான் விரும்பவில்லை.

நியாயம் வேண்டித்தான் அப்பாவி மக்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். அவர்கள் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 301 ஆவது அறையின் தராசு கிரிக்கெட் நிறுவனத்தை சார்ந்திருக்கிறது.
நீதிமன்றம் பக்கசார்பான தீர்மானத்தை வழங்கியுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல்வாதிகளால் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயக திணைக்களமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான தீர்ப்பை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியை நாடாளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன். ஜனாதிபதியிடமும் நான் கோரிக்கையை முன்வைக்கிறேன்.
சுயாதீனமான நீதித்துறையை உருவாக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தலையிட வேண்டும். ஊழல்வாதிகளுக்கு சட்டத்தரணிகள் துணைபோகக் கூடாது. சுயாதீன நீதித்துறையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சூதாட்டத்தில் ஈடுபடும் சம்மி என்பவரா ரொஷான் ரணசிங்கவா முக்கியம் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறவிருந்த நிலையில் எல்.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்டன. அதனால் கிரிக்கெட் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டது.
எல்.பி.எல். போட்டிகளால் நாட்டுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை.

இந்த நாட்டில் அமைச்சர் ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு இந்த ஊழல்வாதிகளுக்கு பலம் இருக்கிறது. பாதாள உலகக் குழுவினருடனும் தொடர்பு இருக்கிறது.
ஜனாதிபதி எல்.பி.எல் போட்டியை காண சென்றபோது அவருக்கு பின்னால் பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த ஒருவர் இருந்தார்.
வர்த்தமானி வெளியிடப்போவதாக தகவல் அறிந்திருந்தால் அதனையும் இந்த ஊழல்வாதிகள் நிறுத்தியிருப்பார்கள்.
தவறை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். எனது பொறுப்பை நான் நிறைவேற்றினேன்.
இந்த ஊழல்வாதிகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதிஇ பிரதமர்இ அமைச்சரவைஇ நாடாளுமன்றம் என அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை முன்வைக்கிறேன்”.