ரஷ்யப் படையினரிடமிருந்து மீட்கப்பட்ட உக்ரைனின் இசியம் நகரில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதை குழிகளிலிருந்து சடலங்களை தோண்டி எடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பின் போது இசியம் நகரில் மனித உரிமை மீறல் நடைபெற்று, ரஷ்யப் படையினரால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். என்பதை நிரூபிப்பதற்காக சடலங்கள் தோண்டி எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இசியம் நகருக்கு வெளியே, ஏராளமான உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள பைன் மரக் காட்டில், சடலங்களை தோண்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உக்ரைன் அவசரக்கால சேவை அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதைக்கப்பட்டுள்ள சடலங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர்? என்று ஆய்வு செய்வதற்காக இந்தப் பணி நடைபெற்று வருகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பின் போது அங்கு போர்க் குற்றம் நடைபெற்றிருப்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை என இசியம் நகரில் அமைந்துள்ள கார்கிவ் பிரதேசத்தின் நீதி அமுலாக்க அதிகாரி தெரிவித்துள்ளார். முதலில் தோண்டி எடுக்கப்பட்ட ஒரு சடலத்தின் கழுத்தை இறுக்கியபடி கயிறு இருந்ததாகவும், உயிரிழப்புக்கு முன்னதாக அந்த நபர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் உடலில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பைன் மரக் காட்டில் புதைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் இசியம் நகரம் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்தபோது சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் எனவும் சிலர் ரஷ்யாவின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எனவும் அவர் கூறினார். அந்தப் பகுதியில் வழக்கமாக இருந்த மயானத்தில் மட்டுமன்றி கூடுதல் இடத்தில் அந்த சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புச்சா, மரியுபோல் ஆகிய நகரங்களை ரஷ்யப் படையினரிடமிருந்து மீட்ட பின்னர், அங்கு மாபெரும் மனிதப் படுகொலைகள் நடந்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், புச்சா நகரத்தை போலவே இசியம் நகரிலும் ரஷ்ய படைகள் படுகொலைகளில் ஈடுபட்டதாகக் கூறும் உக்ரைன் அதிகாரிகள், அதனை நிரூபிப்பதற்காக புதை குழிகளிலிருந்து தற்போது சடலங்களைத் தோண்டியெடுத்து வருகின்றனர்.