உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படும் புலம்பெயர் அமைப்பு தமிழ்நாட்டில் ‘மலையகம் 200’ என்னும் தலைப்பில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதற்கு முயற்சித்து, பின்னர் அந்த நிகழ்வுக்கு தமிழ் நாடு அரசாங்கம் தடைவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, உருத்திரகுமாரன் தமிழ்நாடு அரசாங்கத்தை கண்டித்து அறிக்கை விடுத்திருப்பதுடன் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இது வெந்த சிரங்கில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பானது.
தமிழ் மக்களுக்கு சாதகமாக இருப்பவர்களை எதிரிகளாக்கும் செயல்பாடுகளால் தாயக மக்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப்போவதில்லை.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படும் புலம்பெயர் அமைப்பானது விடுதலைப் புலிகளின் வீழ்சிக்கு பின்னர், அவர்களின் கொள்கை நிலைப்பாட்டை ஜனநாயக வழியில் அடையப் போவதாக கூறிவருகின்றது.
அந்த அடிப்படையிலேயே அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றது.
இலங்கையை துண்டாக்க வேண்டுமென்னும் நிலைப்பாட்டை கொண்ட புலம்பெயர் அமைப்பொன்று தமிழ்நாட்டுக்குள் நிகழ்வுகளை நடத்துவதை தமிழ்நாடு அரசாங்கம் அனுமதிக்காது.
அவ்வாறு அனுமதித்தால், அது தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
பாதுகாப்பு விடயங்களில் தமிழ்நாடு தவறிழைப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டுவதற்கான நிலைமை ஏற்படும்.
இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டு அரசாங்கமானது குறித்த நிகழ்வுக்கான அனுமதியை மறுத்திருக்கின்றது.
அதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள்.
இந்த விடயத்தையும் தமிழ்நாடு அரசாங்கம் கருத்தில் கொண்டிருக்கின்றது.
தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையில் விடயத்தை தவறென்று கூற முடியாது.
ஏனெனில், மத்திய அரசுடன் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய, பாதுகாப்பு விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை தமிழ்நாட்டால் அனுமதிக்க முடியாது.
இதனை உருத்திரகுமாரன் தலைமையிலான அணியினர் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
மேற்குலக நாடுகள் போன்று, கருத்துச் சுதந்திரம் என்னும் பெயரில் அனைத்து விடயங்களையும் அனுமதிக்கும் நடைமுறை இந்தியாவில் இல்லை.
அதேவேளை இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கும் புலம்பெயர் அமைப்புகள் சுதந்திரமாக தமிழ்நாட்டில் செயல்படுவதை – ஓர் இராஜதந்திர பிரச்னையாகவும் இலங்கையால் மாற்றியமைக்க முடியும்.
இந்த விடயங்களையும் தமிழ்நாட்டு அரசாங்கம் கருத்தில் கொண்டிருக்கும்.
இவ்வாறான விடயங்களின்போது, தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக அறிக்கை வெளியிடுவதில் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.
பொறுப்பற்ற வகையில் செயல்படுவதானது, ஈழ – தமிழக உறவுகளை பாதிக்கும்.
ஆளும் திராவிட முன்னேற்றம் கழகத்துடன் தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.
அத்துடன் தமிழ்நாட்டுடன் நல்லுறவுகளை கொண்டிருப்பவர்களுக்கு தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்தும்.
இவ்வாறான விடயங்களின் போது, தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மதில் மேல் பூனைகள் போன்றிருக்காமல், விடயங்களை கண்டிக்க வேண்டும்.
களத்திலுள்ள கட்சிகள் தெளிவற்ற நிலைப்பாடுகளில் இருப்பதால்தான் இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.