27 C
Colombo
Wednesday, October 23, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிரணியின் தடுமாற்றம்!

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தைக் கலைத்து இரு மாதங்களுக்கும் குறைவான காலத்துக்குள் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட்ட நேரத்தில் இருந்து தொடங்கிய எதிரணி அரசியல் கட்சிகளின் தடுமாற்றம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த தோல்வியின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்னதாக ஜனாதிபதி பாராளுமன்றத் தேர்தலுக்கு முந்திவிட்டார். தேசிய மக்கள் சக்தி உறுதி யான அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாக பாராளுமன்றத்தில் பெரிய பெரும்பான்மை பலத்தை தங்களுக்குத் தருமாறு ஜனாதிபதி தற்போதைய தேர்தல் பிரசாரங்களில் மக்களிடம் கேட்கிறார்.

ஜனாதிபதியையும் தேசிய மக்கள் சக்தியையும் பொறுத்தவரை மக்களிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கையோ – வேண்டுகோளோ மிகவும் எளிமையானது. ஆனால், எதிரணியை பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் மக்கள் முன்னிலையில் வைப்பதற்கு உருப்படியான வேண்டுகோளோ – வாக்குறுதியோ எதுவும் இல்லை என்பதை கடந்த சில நாட்களில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளையே பாராளுமன்றத்துக்கு மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை புதியவர்களால் கையாளமுடியாது எனவும் கூறினார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குத் தன்னுடன் கடந்த இரு வருடங்களாக பாடுபட்டவர்கள் அடுத்த பாராளுமன்றத்தில் பயனுடைய பங்களிப்பை வழங்கக்கூடிய அனுபவத்தையும் ஆற்றலையும் கொண்டிருப்பதால் அவர்களைத் தெரிவுசெய்வதற்கு எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அழைப்புடன் விக்கிரமசிங்க தனது செய்தியை முடித்துக் கொண்டார்.

இதேவேளை, பிரேமதாஸ நாட்டு மக்களுக்கு எதைக் கூறி வாக்குக் கேட்பது என்று தெரியாமல் தடுமாறுகின்ற பரிதாபத்தை காண்கிறோம். ஜனாதிபதி திஸநாயக்கவுடன் ஒத்துழைத்து செயல்படுவதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்றும் ஜனாதிபதிக்கு உறுதுணையாகச் செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாக மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பிரேமதாஸ மக்களைக் கேட்கிறார்.

அனுர குமார திசநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்த மக்கள் அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் செயல்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் வசதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு அவரின் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவை வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையை அடிப் படையாகக் கொண்டு கணிப்பீடுகளைச் செய்வோர் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைப்பது சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள்.

விக்கிரமசிங்கவும்கூட எந்தக் கட்சிக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை என்றே தனது அறிக்கையில் கூறினார். ஆனால், தேசிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவையும்விட கூடுதலான ஆதரவை மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அவரின் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கக் கூடியதாக மக்கள் வாக்களிப்பார்களே தவிர, வேறு ஒரு கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு வாக்களிப்பார்களா? பிரேமதாஸவுக்கு எங்கிருந்துதான் இந்த யோசனை வந்ததோ?

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles