‘‘தேசிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றி லிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும். எது எவ்வாறாக இருந்தாலும், இந்த அரசாங்கத்தின் உண்மை யான மாற்று தெரிவாவதற்கான தகுதி சர்வசன அதிகாரம் கூட்டணிக்கே இருக்கிறது. அதன் காரணமாக மாற்று அரசாங்கமாக பொறுப்புக்கூறக் கூடிய எதிர்க்கட்சியாக, எதிர்க்கட்சிக்கு உயிரோட்டத்தை வழங்க எதிர்பார்த்துள் ளோம். நாங்கள் பிரதான எதிர்க்கட்சியைக் கைப்பற்றி அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பிலேயே வேலைத்திட்டங்களை முன்மொழிவோம்” என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கட்சி அலுவலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒருசில எதிர்க்கட்சிகள் பொதுத் தேர்தலுக்காக பிரதமருக்கான பெயர்களையும் தெரிவு செய்துவிட்டார்கள். தமக்கு அரசியல் தொடர்பிலும் தேர்தல் தொடர்பிலும் அவர்களுக்கு இருக்கும் அறியாமை இந்த தீர்மானங்களில் வெளிப்படுகிறது. அவ்வாறான கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தை மாத்திரமல்ல எதிர்க் கட்சித் தலைவர் பதவியைக் கூட வழங்குவது பொருத்தமற்றதாகும்.
இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று 3 9 மாத காலப்பகுதிக்குள் பொதுத் தேர்தல் இடம்பெற்றுள்ளது. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த கட்சியே பொதுத் தேர்தலிலும் பெரும் வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது. எனவே, ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஓரிரு மாதங்களில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த தரப்பே பொதுத் தேர்தலிலும் வெற்றிபெறும்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப்பெற்ற வாக்குகள் பொதுத் தேர்தலில் கிடைக்குமாக இருந்தால் தேசிய மக்கள் சக்திக்கு 105 ஆசனங்கள் கிடைக்கப்பெறும். பொதுவாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த கட்சியொன்று பொதுத் தேர்தலிலும் அந்த வாக்குகளை தக்கவைத்துக்கொள்ளும். அவ்வாறு குறைவடைவதாயின், 05 சதவீதமான வாக்குகளே குறைவடையும். இவை வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
1989ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த தரப்பு 22 சதவீத வாக்குகளையும் 2010ஆம் ஆண்டு 33 சதவீத வாக்குகளையும் 2015 ஆம் ஆண்டு 18 சதவீத வாக்குகளையும் 2020 ஆம் ஆண்டு 42 சதவீத வாக்குகளாகவும் குறைவடைந்துள்ளன.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் கட்சியொன்று பொதுத் தேர்தலில் 18 –42 சதவீதம் வரையில் வாக்கு வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை வரலாறு வெளிப்படுத்துகிறது.
எனவே, இம்முறை வெற்றியை இலக்காக கொண்டு சஜித்துக்கும் வாக்களித்தார்கள். ரணிலுக்கும் வாக்களித்தார்கள். எனவே, இந்த இருத் தரப்பினருக்குமான வாக்குகள் குறைந்தபட்சம் 25 சதவீதம் என்ற அடிப்படையில் வீழ்ச்சியடையும் என்பதை பயமின்றி எதிர்வுக் கூற முடியும். அவ்வாறு நடந்தால் தேசிய மக்கள் சக்திக்கான வாக்குகள் அதிகரிக்காவிட்டாலும் பிரதான எதிர்க்கட்சிகள் இரண்டின் வாக்குகள் குறைவடையும் என்பதால் தேசிய மக்கள் சக்திக்கு 113 என்ற பெரும்பான்மை கிடைக்கும்.