ஏழரைக் கோடி ரூபாய் திருட்டு சம்பவம் – சந்தேகநபர்கள் தொடர்பாக வெளியாகிய தகவல்கள்!

0
35

மினுவாங்கொட பகுதியில் ஏழரை கோடி ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இருவரும் யாழ்ப்பாணம் பகுதியில் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் அங்கு நடமாடுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளதால் அவர்களைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்குப் பணத்தை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பாகப் பணம் கொண்டு செல்லும் நிறுவனத்தின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தைத் திருடி அதே வாகனத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.பின்னர் கம்பஹா – உக்கல்கொட பகுதியில் வாகனத்தை நிறுத்தி பணத்தை எடுத்துக் கொண்டு மற்றுமொருவருடன் உந்துருளியொன்றில் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் பணத்தில் 3 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.அதேநேரம் பணத்துடன் தப்பிச் சென்ற இருவரும் குருணாகல் பகுதியில் உள்ள உடற்பிடிப்பு நிலையமொன்றுக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வாடகை வாகனமொன்றில் நாகதீபத்திற்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த பயணத்தின் போது குருநாகல் கணேவத்த பகுதியில் சந்தேகநபர்கள் இருவரும் வீதியில் சென்ற ஒருவரிடம் 10,000 ரூபாயைக் கொடுத்துக் கையடக்கத் தொலைப்பேசியொன்றைப் பெற்றுள்ளனர்.தங்கள் உறவினர் ஒருவரின் பிறந்தநாளுக்குப் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகையைப் பரிசாக வழங்கியதாகவும் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் நாகதீப விகாரைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த இருவரும் தாங்கள் பயணித்த வாகனத்தின் சாரதிக்கு ஒரு இலட்சத்து 20 ரூபாவினை செலுத்தியுள்ளனர்.பின்னர் குறித்த வாகன சாரதியையும் உதவியாளரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரித்தபோது சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பகுதியில் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களின் ஆதரவுடன் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.