ஒழுக்கத்தை மீறிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் – எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

0
74

சமூக ஒழுக்கத்தை மீறும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை, புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் நெறிமுறைகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ளடங்கிய அம்சங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு அவை பதிவு செய்யப்படுவதுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டும் என புத்தசாசனம், சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் கே. டி.ஆர். நிஷாந்தி ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புத்தசாசன, கலாசாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு, தற்போதுள்ள சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.