ஒக்டோபர் மாதத்துக்கான ரூ.3000 கொடுப்பனவை அடுத்த வாரத்திற்குள் அவர்களது கணக்கில் வைப்பிலிடுமாறும் 3000 ரூபா கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு 24- 08- 2024 திகதியிட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நிதி எதுவும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி இதற்கான நிதியை வழங்குமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்துக்கான ஓய்வூதியம் ஏற்கனவே ஓய்வூதியர்களின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதால், ஒக்டோபர் மாதத்துக்கான ரூ.3000 கொடுப்பனவை அடுத்த வாரத்திற்குள் அவர்களது கணக்கில் வைப்பிலிடுமாறும் 3000 ரூபா கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.