கச்சதீவு விவகாரம் 50 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கப்பட்ட ஒரு விடயம்!

0
120

கச்சதீவு விவகாரம் 50 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கப்பட்ட ஒரு விடயம் என்பதால் அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கச்சதீவு விவகாரம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் ஆட்சியின் போது, இலங்கைக்கு இந்தியா, கச்சதீவினை தாரைவார்த்திருந்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலுக்கு அமைய, சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்தனர்.

அதனை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய தரப்பினரும் மேற்கோள்காட்டி காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் ஆட்சியை விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, குறித்த விவகாரம் 50 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கப்பட்ட விடயம் என்பதால், அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.