கடனை திருப்பிச் செலுத்துவதில் ஆபத்தை எதிர்கொள்ளும் இலங்கை!

0
150

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீட்டிக்கப்பட்ட நிதி வசதிகளைப் பெறுவதற்காக உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை இலங்கை நாடினால், உள்ளூர் நாணயப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்தாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச ஃபிட்ச் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளது. இலங்கை தனது உள்ளூர் நாணயப் பத்திரங்களில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அதிக ஆபத்தை எதிர்கொள்கிறது என ஃபிட்ச் மதிப்பீடுகளின் ஹொங்காங் இணைப் பணிப்பாளர் சகாரிகா சந்திரா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். ஃபிட்ச் மதிப்பீடுகளின் நீண்டகால உள்ளூர் நாணயக் கடன் மீதான ‘சிசிசி’ மதிப்பீடு மே மாதத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் நாணயக் கடன் மறுசீரமைப்பில் நுழைவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 30 பில்லியன் டொலராகவும் உள்நாட்டுக் கடன் 34 பில்லியன் டொலராகவும் இருந்தது.
இலங்கை தனது வரலாற்றில் முதன்முறையாக மே மாதம் தனது டொலர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதோடு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடனுக்கான ஒப்புதலைப் பெறுவதற்கு தனியார் பத்திரதாரர்களுக்கு மேலதிகமாக சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், வெளிநாட்டு பத்திரம் வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றான கமில்டன் றிசேர்வ் பாங்க் லிமிடெட், இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என குற்றம் சாட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அமெரிக்க டொலர் சந்தை மற்றும் மென்மையான கடன் மறுசீரமைப்பு மூலம் மட்டுமே இலங்கை நிலையான கடன் நிலைகளை அடைய முடியுமா என்பதில் ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது’ என சிங்கப்பூரின் அப்டேனில் உள்ள ஆசியன் சொவேய்ன் டெப்ற் தலைவர் கென்னத் அகன்டிவ் தெரிவித்துள்ளார். உள்ளூர் நாணயக் கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியக் கடன் நிலைத்தன்மை நிலைகளாகக் கருதுகிறது. இது மிகவும் சர்ச்சைக்குரியது என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கடன் மறுசீரமைப்பில் உள்ளுர் பத்திரங்களை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கடந்த ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமல் நாட்டின் கடனை நிலைநிறுத்த முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். எனினும், உள்ளூர் நாணயக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது இலங்கையின் வங்கித் துறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இது அத்தகைய மறுசீரமைப்பின் நிகர நன்மைகளை கடுமையாகப் பாதிக்கலாம்’ என பிட்ச் மதிப்பீடுகள் எச்சரித்துள்ளது. எவ்வாறாயினும், கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தில் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், வரவிருக்கும் வாரங்களில் கடன் வழங்குநர்களுக்கு விளக்கக்காட்சியை வழங்க உள்ளதாகவும் நிதி அமைச்சக அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.