சீமெந்து விலையைக் குறைப்பதன் மூலம் மாத்திரம், கட்டட நிர்மாணத்துறையைக் கட்டியெழுப்ப முடியாது என இலங்கை கட்டட நிர்மாணத்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றதன் இலாபத்தை, பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த சங்கத்தின் தலைவர் எம்.டீ.போல் தெரிவித்துள்ளார்.
விலையை எவ்வாறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானிக்க வேண்டும்.
பொருட்களின் விலையை குறைந்த மட்டத்திற்கு கொண்டு வந்தால், நிர்மாணத்துறையை ஓரளவுக்கு முன்கொண்டு செல்ல முடியும்.வங்கி வட்டி வீதம் குறைய வேண்டும். அத்துடன், புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கும் போது, அதன் மொத்த பெறுமதியில் 7 சதவீதமே சீமெந்திற்கு செலவாகும்.
850 ரூபாவாக இருந்த ஒரு மூடை சீமெந்து, தற்போது 2 ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. சீமெந்தினால் மாத்திரம் கட்டடத்தை நிர்மாணிக்க முடியாது. கம்பிகள், வர்ணப்பூச்சுகள், வயர்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் என கலந்துரையாடுவதற்கு இன்னும் பல விடயங்கள் உள்ளன என்று இலங்கை கட்டட நிர்மாணத்துறை சங்கத்தின் தலைவர் எம்.டீ போல் தெரிவித்துள்ளார்.