காரைநகர், யாழ்ற்ரன் கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவரால் ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைப்பு!

0
82

யாழ்ப்பாணம். காரைநகர், யாழ்ற்ரன் கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் ஸ்மார்ட் வகுப்பறை கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 234 ஆவது கட்டமாக 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், இதன்போது வழங்கப்பட்டன.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

சாதி, மதம், வர்க்கம், கட்சி, அந்தஸ்து ஏதுவாக இருந்தாலும், நாமனைவரும் இலங்கைப் பிரஜைகளாவோம்.
எமது நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போலவே பல்வேறு பிரச்சினையான சூழ்நிலைகளையும் சந்தித்து வருகிறோம்.
முட்டிமோதுவது இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைப்போவதில்லை.
கலந்துரையாடல் மற்றும் ஒருமித்த கருத்து மூலம் பரஸ்பர நம்பிக்கையுடன் செயல்பட்டு ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக செயல்படுவதே இதற்கு தீர்வாக அமையும். சாதி, இனம், மதம், அந்தஸ்து, பிரதேசம் எதுவாக இருந்தாலும், இந்நாட்டிலுள்ள சகலரும் ஒரே அந்தஸ்துள்ள குடிமக்களாவர்.
இவர்கள் அனைவருமே இலங்கை பிரஜைகள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம், இந்நாட்டில் வாழும் அனைவரும் சம அந்தஸ்துடையவர்கள் ஆவர். இது அரசியலமைப்பில் உள்ளது போலவே நடைமுறையிலும் அது உண்மையான ஓன்றாக இருக்க வேண்டும்.
சட்டமானது இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி, அந்தஸ்து இல்லாமல் அனைவருக்கும் சமமான ஒன்றாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதிகாரம் படைத்தவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரு சட்டமும், சாதாரண மக்களுக்கு இன்னுமொரு சட்டமும் எமது நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. இது தவறாகும்.


யுத்தம் நிறைவடைந்து பல வருடங்களாகியும், மக்களின் அபிவிருத்தி மற்றும் அரசியல் அபிலாஷைகள், சமூக, மத, கலாசார, கல்வி, சுகாதார உரிமைகள் நிறைவேற்றப்படவில்லை. ரணசிங்க பிரேமதாசவின் ‘கிராமத்தைக் கட்டியெழுப்பி, நகரத்தைக் கட்டியெழுப்பி, நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற எண்ணக்கருவிற்கு ஏற்ப ஸ்மார்ட் குடிமக்கள் தலைமுறையை உருவாக்கி, ஸ்மார்ட் கிராமம், ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி, ஸ்மார்ட் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் போலவே முழு நாட்டிலும் உள்ள இளைஞர்கள் அறிவு மற்றும் திறன்களால் வலுவூட்டப்பட வேண்டும்.
திறமையிலும், புதிய தொழில்நுட்பத்திலும் கவனத்தை செலுத்தும் இளைஞர்களாக மாற்ற வேண்டும். வட மாகணத்தைப் போன்று ஏனைய மாகாணங்களிலும் அனைவரும் ஒன்றிணைந்து திறமையான பிள்ளைகளையும், திறமையான இளைஞர்களையும் திறமையான குடிமக்களையும் உருவாக்க வேண்டும்.
நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டு மக்களின் ஆலோசனைகளால் வலுவான கொள்கை வகுப்பாக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் நினைப்பதையெல்லாம் செய்வதை விடுத்து, அடிமட்ட மக்களின் கருத்துக்களால் கொள்கைகள் வலுப்படுத்தப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். மேல் மட்டத்தில் தீர்மானங்களை எடுத்து செயல்படுத்துவதில் அர்த்தமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் வடக்கிற்கும் போலவே ஏனைய மாகாணங்களுக்கும் அதிகாரங்களை வழங்கி, இந்நாட்டில் கிராம இராஜ்ய ஆட்சி முறை முன்னெடுக்கப்பட வேண்டும்.
9 மாகாணங்களிலும், 25 நிர்வாக மாவட்டங்களிலும், 341 பிரதேச மற்றும் உப பிரதேச செயலகப் பிரிவுகளிலும், 14 ஆயிரத்து 21 கிராம அலுவலர்கள் பிரிவுகளிலும் 51 ஆயிரம் கிராமங்களும் நகரங்களும் உள்ளன. கிராம இராஜ்ய திட்டத்தின் மூலம், கிராமத்திலும் நகரத்திலும் முடிவெடுக்கும் பொறுப்பை அரசியல்வாதிகளை விடுத்து குடிமக்களே ஏற்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்தக் கடமையை நிறைவேற்றுவோம்.