பசறை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் பதுளை பகுதியைச் சேர்ந்த 64, 58 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையில் இருந்து ஒக்கம்பிட்டி பகுதிக்கு தான நிகழ்வொன்றிற்கு சென்று மீண்டும் பதுளைக்கு திரும்பும் போது பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் விபத்துக்குள்ளாகும் போது காரில் ஐவர் பயணித்ததாகவும் அதில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.