29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

குடும்ப ஆட்சியை
எதிர்த்தல்?

சிங்கள அரசியல் வரலாற்றில், குடும்ப செல்வாக்கையும் சிங்கள அதிகார மையத்தையும் பிரிக்க முடியாது. ராஜபக்ஷக்கள் அரசியலில் கோலோச்
சுவதற்கு முன்பதாகவே, சேனநாயக்க குடும்பமும், பண்டாரநாயக்க
குடும்பமும் சிங்கள அதிகாரத்தை அலங்கரித்திருக்கின்றனர். ரணசிங்க பிரேமதாஸ ஒருவர்தான் இதில் விதிவிலக்கானவர். அடிமட்டத்திலிருந்து,
படிப்படியாக வளர்ந்து, அதிகாரத்தைக் கைப்பற்றியவர் பிரேமதாஸ.
2005இல், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்துதான், மெதமுல்லை ராஜபக்ஷக்களின் குடும்ப அரசியல்
தெற்குக்கு அறிமுகமானது. சேனநாயக்க மற்றும் பண்டாரநாயக்கக்களின்
அதிகாரம் என்பது, அடிப்படையில் சிங்கள மேட்டுக்குடியின் செல்வாக்காகும்.
ஒப்பீட்டடிப்படையில், ராஜபக்ஷக்கள் கொழும்பின் சிங்கள மேட்டுக்குடியால்
கண்டுகொள்ளப்படாதவர்களாவர்.
சந்திரிகாவின் வார்த்தையில் கூறுவதானால், கல்வியறிவற்ற, கலா சாரமற்ற கூட்டம். சந்திரிகா குமாரதுங்க, ஜனாதிபதியாக இருந்த காலத் தில்தான், மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானார். மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமராக நியமிப்பதற்கு சந்திரிகாவுக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை. ஏனெனில், ராஜபக்ஷவை, அவர் ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. அப் போது, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமாராக்குவதில், மங்கள சமரவீரவே பிரதான பங்கு வகித்திருந்தார். ஆனால், அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், நண்பரா, தனது குடும்பமா என்னும் நிலைமையேற்பட்டபோது, மஹிந்த குடும்பத்தையே முதன்மையானதாக தெரிவு செய்தார். மங்களவை ஓரம் கட்டினார்.
இப்படித்தான் ராஜபக்ஷக்களின் தென்னிலங்கை சாம்ராச்சியம்
கட்டியெழுப்பப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்
போது, இன்று ராஜபக்ஷக்களை எதிர்க்கும் அனைவருமே, ராஜபக்ஷக்களின்
யுத்தத்திற்கு முண்டுகொடுத்தவர்கள்தான். கோட்டாபய ராஜபக்ஷ சிரித்துக்
கொண்டே கொலை செய்பவர் – என்று சத்தமிடும் ஜே. வி. பி. தலைவர் அநுரகுமார திஸநாயக்க, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநியாயங்களை கண்டும் காணாமல் இருந்தவர்தான். அதற்கு எதிராக
ராஜபக்ஷக்களை கண்டிக்காதவர்தான்.
இப்போது, அனைவருமே ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட
வேண்டுமென்னும் உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டிருக்கின்றனர். காலி
முகத்திடலில், ஆங்கிலம் பேசும் கொழும்பின் மேட்டுக்குடியினர் ஒன்று
கூடி, ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு கோருகின்றனர். இனவாதம்,
மதவாதம் வேண்டாம் என்கின்றனர். இதனைத்தான் கடந்த 70
வருடங்களுக்கும் மேலாக, தமிழ்த் தலைவர்கள் கோரிவந்தனர். அப்போது
கொழும்பின் மேட்டுக் குடியான, சேனநாயக்க குடும்பமும், பண்டாரநாயக்க
குடும்பமும் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுக்கு செவி
சாய்க்கவில்லை.
ராஜபக்ஷக்களுக்கும் ஏனைய தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாடு என்ன? ஒன்றுதான் – அதாவது,
ஏனையவர்கள் குடும்ப செல்வாக்கை கொண்டிருந்தாலும் தங்களின்
குடும்பம் மட்டும்தான் அரசியலில் கோலோச்ச வேண்டுமென்னும் நோக்கில்
திட்டமிட்டு செயல்படவில்லை. ஆனால், ராஜபக்ஷக்களோ, தங்களுடைய
குடும்ப எல்லைக்கு வெளியில் எவருமே அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடாதென்று எண்ணுகின்றனர். அந்த அடிப்படையில் திட்டமிட்டு
மற்றவர்களை ஓரம் கட்டுகின்றனர்.
முக்கிய பொறுப்புக்கள் அனைத்தையும் தங்களது குடும்பத்தின் செல்வாக்குக்குள் வைத்திருக்கின்றனர். இந்த வகையான குடும்ப
அதிகாரத்தைத்தான் இப்போது தென்னிலங்கையின் படித்த, நடுத்தர மற்றும்
மேட்டுக்குடி மக்கள் எதிர்கின்றனர். இந்த எதிர்ப்பே இப்போது மேலும் விரிவு
பெற்று, மக்கள் மயமாகிவருகின்றது. குடும்ப ஆட்சி எதிர்க்கப்பட வேண்டியதுதான் ஆனால், அதனை எதிர்ப்பதுடன் தமிழர் பிரச்னை
தீர்ந்துவிடப் போவதில்லை. இந்த அடிப்படையில்தான், தமிழ்த் தேசிய
தரப்புக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு வாய்ப்புக்களையும்
பயன்படுத்தி, குறிப்பிட்ட காலத்தில் எதைப் பெற முடியுமோ, அதனை
பெறுவது தொடர்பில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். காலத்தைத் தவற
விட்டுவிட்டு, பின்னர் மற்றவர்களை குற்றம்சாட்டுவதில் பயனில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles