மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சுவிஸ் கிராமத்தில், அதீத ஒலியெழுப்பியவாறு, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் எழுந்த முரண்பாடு, கொலையில் முடிவடைந்துள்ளது.
சுவிஸ் கிராம வீதியூடாக இளைஞரொருவர் நேற்றிரவு 10 மணியளவில், அதீத ஒலியெழுப்பியவாறு மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் இரு சாராருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் நிகழ்ந்துள்ளது.
கைகலப்பில் சிக்கிய 19 வயதுடைய தங்கேஸ்வரன் அபிலாஸ் என்ற இளைஞனை அவரது தந்தை மீட்டு, வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது, அவரைப் பின்தொடர்ந்து
வந்த சிலர், கூரிய ஆயுதத்தால், தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் இளைஞனுக்கு கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயமேற்பட்டுள்ளது.
காயமடைந்த இளைஞன் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய சந்தேக நபரொருவரை கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.