இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.
ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’ வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆதிபுருஷ்’ படத்தால் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கைகூப்பி நான் என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன். நம்முடைய புனித சனாதனத்துக்கும், தேசத்திற்கும் நாம் சேவை புரிவதற்கான வலிமையை பஜ்ரங்பலி வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.