உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இனியும் இந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விட மாட்டோம். எமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன்கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தப்பட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி தமது ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதாவது விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நாங்கள் அமைப்போம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் விசேட விசாரணையாளர்களையும் கொண்டதாக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும் என்றார்.
விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து, ஆணைக்குழுவால் வழங்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்தி, சட்டமா அதிபர் ஊடாக குற்றவியல் வழக்குகளை தொடர்ந்தும், இதற்காக விசேட நீதிமன்றத்தை அமைத்தும், சுயாதீன அரசாங்கத்தின் குற்றபத்திரிகை அலுவலகம் ஒன்றையும் அமைப்போம் என்றார்.