கடந்த வாரத்தைய பாராளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக மூன்று நாள் பயிற்சி கருத்தரங்கு அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல்களுக்கு பிறகு புதிய உறுப்பினர்களுக்கு இவ்வாறாக பயிற்சி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்படுவது வழமையாகும். ஆனால், அண்மைய தசாப்தங்களாக சபைக்குள் பெரும்பாலான உறுப்பினர்கள் அடிக்கடி அடாவடித்தனங்களில் ஈடுபட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவர்கள் பயிற்சிக் கருத்தரங்குகளின் மூலமாக பாராளுமன்ற நடைமுறைகளில் எதையாவது கற்றுக் கொண்டதற்கான எந்த அறிகுறியையும் காணக்கூடியாதாக இருக்கவில்லை.
ஊழல் முறைகேடுகள் இல்லாத ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப் போவதாக வாக்குறுதி அளித்துக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு தென்னிலங்கையில் மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கு உட்பட நாடு பூராவும் இன, மத பேதமின்றி மக்கள் பிரமாண்டமான ஆணையை பாராளுமன்றத் தேர்தலில் வழங்கியிருக்கிறார்கள். பாராளுமன்றத்தை துப்புரவு செய்யும் ‘சிரமதான தினமாக’ நவம்பர் 21 ஆம் திகதியை கருதி வாக்களிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். அதற்கு இணங்க மக்கள் சிரமதானத்தை செய்து அதிக பெரும்பான்மையாக புதிய உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
புதிய கலாசாரத்தை தோற்றுவிக்கும் ஜனாதிபதியின் குறிக்கோளின் வெற்றியும் தோல்வியும் இந்த புதிய உறுப்பினர்களிலேயே தங்கியிருக்கிறது. சபை நடவடிக்கைகளை பாடசாலை பிள்ளைகள் பார்வையிடுவதற்கு சபாநாயகர்கள் தடை விதிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அளவுக்கு மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் காடைத்தனமாக நடந்துகொண்ட யுகம் மாறி அறிவும் கண்ணியமும் கொண்ட உறுப்பினர்கள் நிறைந்ததாக புதிய பாராளுமன்றம் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குறுகிய காலத்தில் பெரும் பணம் பண்ணக்கூடிய ஒரு மார்க்கமாக அரசியலை பயன்படுத்தியவர்களை பெருமளவில் கொண்டிருந்த முன்னைய பாராளுமன்றங்களைப் போலன்றி புதிய பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருப்பவர்கள் அரசியலை தூய்மையான ஒரு மக்கள் சேவையாக கருதி அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். அதுவே, பழைய அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானவர்களை ‘துடைத்தெறிந்த’ மக்களின் எதிர்பார்ப்பாகும்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளின்போது பொதுவெளியில் குறிப்பாக, சமூக ஊடகங்களில் எவ்வாறு கண்ணியமான முறையில் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினால் பிரயோசனமாக இருக்கும். இதை இங்கு நாம் பிரத்தியேகமாகக் கூறுவதற்கான காரணத்தை அண்மைக்காலமாக குறிப்பாக தேர்தல் பிரசாரங்களின்போது சமூக ஊடகங்களை எவ்வாறு சில பிரகிருதிகள் பயன்படுத்தினார்கள் என்பதை அனுபவ ரீதியாக கண்டவர்கள் அறிவார்கள்.
கற்றறிந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு பாடசாலைக்கே சென்றறியாதவர்களிடம் இருக்கின்ற அளவு கண்ணியத்தைக்கூட கொண்டிராத ‘ஒரு பிரகிருதியை’ குடாநாட்டு மக்கள் இந்த தடவை பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள். மாதர்குலத்தை பற்றி பொதுவெளியில் எவ்வாறு பேச வேண்டும் என்ற அடிப்படை பண்புகூட இல்லாத இந்த பிரகிருதியை நாட்டின் அதியுயர் சட்டவாக்க சபைக்கான தங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்வதற்கு ஒரு கணிசமான எண்ணிக்கையான மக்கள் தீர்மானித்தமை எமது அரசியலினதும் சமூகத்தினதும் பண்பு சீரழிவுத்தனத்தின் தெளிவான வெளிப்பாடாகும். அதனால், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து மாத்திரமல்ல, மக்களின் ‘கௌரவமான’ பிரதிநிதிகளாக எவ்வாறு கண்ணியமாக பொதுவெளியில் நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்தும் பயிற்சிகளை வழங்கவேண்டியது அவசியம் என்று சம்பந்தப்பட்ட பாராளுமன்ற அதிகாரிகளிடம் ‘ஈழநாடு’ கேட்டுக்கொள்கிறது.
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ‘கௌரவ உறுப்பினர்கள்’ என்று அழைப்பது தொடர்பாக காலஞ்சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் லண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியவேளை கூறிய கருத்தொன்றை இங்கு நினைவுபடுத்துவது தருண பொருத்தமானதாகும். ‘இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் கௌரவ உறுப்பினர்கள் என்று அழைக்கிறோம். ஆனால், அவர்களில் பெருமளவானவர்கள் கௌரவமானவர்களாக இல்லை. ஆனால், ஐக்கிய இராச்சியத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவ உறுப்பினர்கள் என்று அழைப்பதில்லை. ஆனால், அவர்களில் பெருமளவானவர்கள் கௌரவமானவர்களாக இருக்கிறார்கள்.’